மகாராஷ்டிரா அரசியல் - அடுத்த அதிரடிக்கு அஜித் பவார் தயார்! இம்முறை மாமனார் சரத் பவார் ஆசியும் ஆதரவும் உண்டா?

மகாராஷ்டிரா அரசியல் - அடுத்த அதிரடிக்கு அஜித் பவார் தயார்! இம்முறை மாமனார் சரத் பவார் ஆசியும் ஆதரவும் உண்டா?
Published on

மறுபடியும் மகாராஷ்டிரா அரசியல் தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார், அடுத்த அரசியல் நகர்வுகளை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இம்முறை ஷிண்டேவுக்கு எதிராக பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருக்கும் என்று மும்பை வட்டாரத்து செய்திகள் தெரிவிக்கின்றன.

அஜித் பவாரை பற்றி தெரியாதவர்கள் மகாராஷ்டிராவில் இருக்க முடியாது. ஷரத்பவாரின் மருமகன். அதிரடி அரசியலுக்கு பேர் போனவர். மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரே இரவில் கூட்டணி அமைத்து, அதிகாலை 5 மணிக்கு துணை முதல்வராக பதவியேற்றவர். 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.கவுக்கு தோல்வி கிடைத்தது. ஆனாலும், ஷரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அஜித்பவார், பா.ஜ.க கூட்டணியோடு சேர்ந்தார். ஆனால், 3 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறவில்லை. ஷரத்பவாரின் ஆசியுடன்தான் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தார் என்று பேசப்பட்டது. அதுதான் உண்மை என்று பா.ஜ.கவினர் தொடர்ந்த பேசி வந்திருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய கட்டளையை மீறி கட்சிக்குள் அஜித்பவார் கலகம் செய்ததாகவும் பின்னர் அவரை மன்னித்து கட்சியில் சேர்த்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக்கியதாக ஷரத்பவார் தரப்பு விளக்கமளித்தது.

2019ல் தவறவிட்டதை, 2023ல் அஜித்பவார் செய்ய நினைப்பதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் வெளியாகின்றன. சிவசேனாவின் ஷிண்டேவால் முடிந்ததை தன்னாலும் செய்ய முடியும் என்று அஜித்பவார் நினைப்பதாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கும் ஷரத்பவார் ஆதரவளிப்பாரா அல்லது அஜித்பவாரை கட்சியிலிருந்து விலக்குவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சென்ற வாரம் மாலை நேரத்தில் எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார், அரசு வாகனங்களை திருப்பி அனுப்பிவிட்டு தனியார் வாகனத்தில் எங்கேயோ கிளம்பிச் சென்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் அஜித் பவார் தலைமையில் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியே வர தயாராக இருப்பதாக செய்திகள் வந்தன. பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்து புதிய அரசை அமைக்கவிருப்பதாகவும் அஜித் பவார் துணை முதல்வராக இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

மறுநாள் தன்னுடைய மனைவியுடன் பிம்பிரியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஓய்வெடுக்க சென்றதாகவும், தன்னைப்

பற்றி தேவையில்லாத வதந்தி பரவிவிட்டதாகவும் விளக்கமளித்திருக்கிறார். கட்சியை விட்டு விலகுவதாக வந்த செய்தி தவறு. எந்த எம்.எல்.ஏ.,விடமும் கையெழுத்து வாங்கவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்திக்க வந்தனர். அவர்களிடம் வேறு எந்த திட்டம் பற்றியும் விவாதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். நெருப்பில்லாமல், புகையுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com