மகாராஷ்டிரா அரசியல்: அஜித், சரத் பவார் மோதல் முற்றுகிறது தலைவர்கள் அதிரடி நீக்கம், நியமனம்!

மகாராஷ்டிரா அரசியல்: அஜித், சரத் பவார் மோதல் முற்றுகிறது தலைவர்கள் அதிரடி நீக்கம், நியமனம்!
Published on

மகாராஷ்டிரத்தில் அரசியல் நாடகம் தொடர்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், தமது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.- ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்தார். மேலும் கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஷிண்டே அரசில் துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பு ஏற்கும் வரை அவரின் சதித்திட்டம் குறித்து கட்சித் தலைவர் சரத் பவார் அறிந்திருக்கவில்லை. எனினும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், கட்சியில் பிளவு ஏற்பட்டது குறித்து கவலை இல்லை என்றும் மீண்டும் கட்சியை கட்டியெழுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு தரப்பினரும் கட்சித் தலைவர்களை நீக்கியும் புதிய நியமனங்களை அறிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் படேல் (கட்சியின் செயல் தலைவர்) மற்றும் சுநீல் தட்கரே எம்.பி. (பொருளாளர்) ஆகிய இருவரையும் கட்சிப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். மேலும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவார் மற்றும் 8 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவின் தலைவரான அஜித்பவார், மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக மக்களவை உறுப்பினர் சுநீல் தட்கரே இருப்பார் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அறிவித்துள்ளார். அதாவது கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து ஜெயந்த் படேல் நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் சுநீல் தட்கரே மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அஜித் தெரிவித்துள்ளார்.

சரத்பவாரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரபுல் படேல், தங்கள் பிரிவின் குழு தலைவராக அஜித்பவார் நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் தேசிய தலைவர் யார் என கேட்டதற்கு, சரத்பாவர்தான் கட்சியின் தேசியத் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரபுல் படேல் ஒரு பேட்டியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி கோஷ்டி இருந்தாலும் கட்சி பெரிதாக பிளவுபட வாய்ப்பில்லை. சரத்பவார், அஜித் பவார் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தில் விரைவில் ஒன்றுபடுவார்கள் என்று கூறியுள்ளார். ஒரு

கட்சிக்குள் இரண்டுவிதமாக கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், பிரச்னைகள் பேசித் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசில் துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவார், ஜெயந்த் படேல் மற்றும் ஜீதேந்திர அவ்ஹாத் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். நான் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சரத் பவார் கோரியுள்ள நிலையில் நாங்களும் பதிலுக்கு அவர்கள் இருவரையும் பதவி நீக்க கோரியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜீதேந்திர அவ்ஹாத், சரத் பவார்தான் கட்சியின் தேசிய தலைவர். அவருக்குத்தான் எல்லா அதிகாரங்களும் உள்ளது. கட்சியின் விதிகள் மற்றும் இந்திய தேர்தல் கமிஷன் விதமுறைகள் படியும் சரத்பவார்தான் கட்சியின் அதிகாரபூர்வ தலைவராக தொடர்கிறார். அஜித் பவாரின் நியமனங்கள் செல்லாது என்று தெரிவித்துள்ளார்.

“என்னை தகுதிநீக்கம் செய்யவோ அல்லது இடைநீக்கம் செய்யவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. எனது விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும்” என்று அஜித்பவார் பக்கம் சென்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com