தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு கோரி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவேசனை எம்.எல்.ஏ.க்கள் 40 பேருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சேர்ந்த 14 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் பதிலளிக்க 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏக்நாத் ஷிண்ட், ஆதிய்த தாக்கரே உள்பட மொத்தம் 54 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் கடந்த ஆண்டு சிவசேனை பிளவுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தவ் பிரிவு எம்.எல்.ஏ. ருதுஜா லட்கேவுக்கு நோட்டீஸ் ஏதும் அனுப்பப்படவில்லை.இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து சிவசேனை கட்சியின் அரசியல் சாசனத்தின் நகலை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட 16 சிவசேனை எம்.எல்.ஏ.க்கள்
மீதான தகுதி நீக்க மனுக்கள் மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என்று நர்வேகர் கூறியிருந்த நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷிண்டே அணியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த 14 பேர் மீது தகுதிநீக்கம் தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் தகுதிநீக்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உத்தவ் தாக்கரே பிரிவு தலைவர் அரவிந் சாவந்த் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்ததாகவும் அதன் விளைவாகவே இப்போது நோட்டீஸ் அனுப்ப்ப்பட்டுள்ளது என்றும் சாவந்த் கூறினார்.
கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுநீல் பிரபு, தலைமை கொறடாவாக இருந்த்தை ஒப்புக்கொண்டிருந்தது. பிளவுபடாத சிவ சேனையின் தலைமைக் கொறடாவாக அவர் இருந்தபோதுதான் ஷிண்டே மற்றும் 15 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதிநீக்க மனு போடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன் பிறகுதான் ஷிண்டே அணி பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 2022 ஜூன் மாதம் ஆட்சியமைத்தது.
கடந்த மே மாதம் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக நீடிப்பார். உத்தவர் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னதாக தாமாகவே முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததால் மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி அரசை மீண்டும் பதவியில் அமர்த்த முடியாது என்று கூறியிருந்தது.