திருச்சியில் கவனிக்கப்படாத காந்தி அஸ்தி மண்டபம்: அரசின் கவனம் பெறுவது எப்போது?

திருச்சியில் கவனிக்கப்படாத காந்தி அஸ்தி மண்டபம்: அரசின் கவனம் பெறுவது எப்போது?

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்திய சுதந்திரத்திற்கு மிகப்பெரிய பங்காற்றிய மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவருடைய தியாகத்தைப் போற்றும் வகையில் அவருடைய அஸ்தி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் காந்தியின் அஸ்தி கடல்களில் கரைக்கப்பட்டும், நிறுவப்பட்டும் நினைவுச் சின்னங்களாக இன்றும் காட்சியளிக்கின்றன.

திருச்சிக்கு பலமுறை வருகை தந்து பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி மக்களை எழுச்சி படுத்திய காந்திக்கும் திருச்சிக்குமான உறவை பறைசாற்றும் வகையில் திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகில் காந்தியின் அஸ்தி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் அமைந்துள்ள காந்தி அஸ்தி மண்டபத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருட்டடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர் விஜயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார்.

அதில், மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5வது மண்டலம் ஈவேரா சாலையில் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் பரப்பினார். உண்மையும் நேர்மையும் அவரால் போதிக்கப்பட்டது. மேலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் நேர்மையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த அவரின் வாழ்க்கையைப் பற்றியச் செய்தியை ஒவ்வொரு மனிதனிடத்திலும் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

எனவே மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி போதனைகளை கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் நூலகம், ஒலி ஒளி திரை, சுற்றுச்சுவர் பலகையில் வாழ்க்கை வரலாற்றைப் படத்துடன் விளக்கக்கூடிய கருத்துக்களை அமைத்து தர வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் காந்தி அஸ்தி மண்டபம் உரிய முறையில் பராமரிக்கப்படாததால், அந்த பகுதி வாழ் மக்களுக்கு கூட காந்தி அஸ்தி மண்டபத்தை பற்றி தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com