மகாவீர் ஜயந்தி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மகாவீர் ஜயந்தி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் திரியோதசி திதி, மகாவீரரின் பிறந்த தினமாக சமண சமயத்தவரால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக மத்திய அரசு இந்நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதோடு, இன்றைய தினத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைககளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.

மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு சமணத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரச குடும்பத்தில் பிறந்தும் செல்வச் செழிப்பைப் புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர் நல்லறங்களை உலகுக்குப் போதித்தவர் வர்த்தமான மகாவீரர். அவரது பிறந்த நாளை சமண மக்கள் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக, தமிழ்நாட்டில் முதன்முதலில் அரசு விடுமுறை அறிவித்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கழக அரசு. 2002ம் ஆண்டு அதனை அ.தி.மு.க அரசு நீக்கினாலும், 2006ம் ஆண்டு 5வது முறையாக ஆட்சிப் பொறுப் பேற்ற தலைவர் கலைஞர் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தார்.

சமணர்கள் இந்திய அறிவு மரபுக்குப் பெரும் பங்காற்றியவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழுக்கும் எத்தனையோ இலக்கிய, இலக்கண நூல்களை இயற்றி இணையற்ற பங்களிப்பை நல்கியவர்கள். இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜயந்தியைப் போற்றுவோம்’ என்று அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com