நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டுப் பணிப்பெண் கைது செய்யப் பட்டுள்ளார் .இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி இவரது வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனது. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐஸ்வர்யா அளித்த புகைப்படங்கள் அடிப்படையாக கொண்டு பணிப்பெண்கள், கார் ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பணிப்பெண் ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி கடந்த 6 மாதத்திற்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றது தெரிய வந்தது. நகைகளைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட வீட்டுப் பணிப்பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக ஐஸ்வரியாவின் நகைகளை அவர் திருடியதும், அந்த நகைகளை விற்று கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணத்தை மாற்றி சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஈஸ்வரியை கைது செய்துள்ள போலீசார், நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.