வழக்கமாக நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக சில மாத்திரைகளை மக்கள் பயன்படுத்துவர். அதில் பல மாத்திரைகள் தரநிலை சோதனையில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் வலியிலிருந்து காய்ச்சல் வரை பலர் பாரசிட்டமலைதான் பயன்படுத்துவார்கள். மருத்துவமனைக்கு செல்லாமலேயே மருந்துக் கடையில் பாரசிட்டமல் மட்டும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அந்த அளவிற்கு கண்மூடித்தனமான நம்பிக்கை சில மாத்திரைகள் மீது மக்களுக்கு உண்டு.
இந்தநிலையில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இந்த மாதத்துக்கான மருந்துகள் எச்சரிக்கை வரிசையில் 53 மாத்திரைகள் சரியான தரத்தில் இல்லை ( "Not of Standard Quality (NSQ) Alert.") என எச்சரித்துள்ளது.
இந்த NSQ என்பது அரசு மருந்து அதிகாரிகள் மாதாமாதம் குத்துமதிப்பாக சில மாத்திரைகளைத் தேர்ந்தெடுத்து அதன் தரத்தை சோதனை செய்வார்கள். அந்தவகையில் இந்த முறை கால்சியம், விட்டமின் டி3 மாத்திரைகள், நீரிழிவு நோய் மாத்திரைகள், இரத்த உயர் அழுத்த மாத்திரைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சோதனை செய்ததில், தரச் சோதனையில் தோல்வியடைந்த விஷயம் வெளிவந்துள்ளது.
ஷெல்கால் வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், ஆன்டிஆசிட் பான்-டி (antiacid Pan-D), பாரசிட்டமல் ஐபி 500 மி.கி மாத்திரைகள், Glimepiride நீரிழிவு எதிர்ப்பு மருந்து, டெல்மிசார்டன் (Telmisartan) உயர் இரத்த அழுத்த மருந்து மற்றும் பல அதிகம் விற்பனையாகும் மருந்துகள், மருந்து கட்டுப்பாட்டாளரின் தரச் சோதனையில் தோல்வியடைந்தது.
இந்த மருந்துகள், ஹெட்டோரோ மருந்துகள் (Hetero Drugs), அல்கெம் ஆய்வகங்கள் (Alkem Laboratories), ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் (HAL), கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், மெக் லைஃப் சயின்சஸ், ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை.
இந்த நிறுவனங்கள், அவை எங்கள் நிறுவனத்தின் மருந்துகள் இல்லை என்றும், போலியானது என்றும் கூறுகின்றன. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 156 மருந்துகள் தர சோதனையில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.