‘மக்களைத் தேடி மேயர்’ அடையாறு பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம்!

‘மக்களைத் தேடி மேயர்’ அடையாறு பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம்!

Published on

சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், ‘மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா. அதன்படி இன்று, சென்னை அடையாறு மண்டலம் 13க்குட்பட்ட எல்.பி. சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்று, அதன் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டார் சென்னை மாநகர மேயர்.

‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு சந்திப்பின் மூலம், சாலை வசதி, மின் விளக்கு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி, தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். பொதுமக்களின் அந்தக் கோரிக்கை மனுக்களை கனிவுடன் பெற்றுக்கொண்ட மேயர், அவற்றில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பெயர் மாற்றம் போன்ற சிறு சிறு கோரிக்கைகளை அப்போதே, அங்கேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் நிறைவேற்றிக் கொடுத்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, ‘தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி, மக்கள் பணியைச் செய்வதற்கன ஆட்சி என்பதற்கேற்ப, ‘மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மண்டலம் 5 மற்றும் 6ல் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. அந்த இரு மண்டலங்களிலும் இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அந்த இரண்டு மண்டலங்களிலும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் பெருவாரியான மனுக்களின் மீது உடனே தீர்வு காணப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள கோரிக்கை மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று, மண்டலம் 13க்குட்பட்ட அடையாறு பகுதி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பகுதி வாழ் பொதுமக்கள் நிறைய பேர் தங்களது கோரிக்கைகளை என்னிடம் நேரிடையாகவே வைத்து இருக்கிறார்கள். உங்களை அனைவரையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கல்வி, மருத்துவம் என உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் மக்களுக்கான இந்த திராவிட மாடல் அரசு நிச்சயம் அதை நிறைவேற்றித் தரும்’ என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை, கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் மற்றும் ஏழை எளியவர்ளுக்கு தையல் இயந்திரம் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

logo
Kalki Online
kalkionline.com