மக்களவை முன்வரிசை இருக்கைக்கு முந்தப்போவது கனிமொழியா? டி.ஆர்.பாலுவா?

டி.ஆர்.பாலு - கனிமொழி
டி.ஆர்.பாலு - கனிமொழி

நாடாளுமன்றம் தொடர்பான எந்த விஷயம் என்றாலும் அந்தந்தக் கட்சி பார்லிமெண்ட் தலைவர்களை ராஜ்ய சபா தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அழைத்து பேசுவது இதுவரை இருந்து வரும் மரபாகும். ஆனால், தற்போது இம்முறை மாறி, பார்லிமெண்ட் கட்சி தலைவர் மட்டுமே அழைக்கப்படும் நடைமுறை உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை பல ஆண்டுகளாக மூத்த தலைவரான டி.ஆர்.பாலுதான் பாராளுமன்றத்தின் திமுகவின் அடையாளமாக அறியப்பட்டு வந்தார். அதேபோல், மக்களவையிலும் அவர்தான் சபையின் முன் இருக்கையில் அமர்ந்து தேவைப்படும்போது எழுந்து கேள்விகளை எழுப்புவார். பார்லிமெண்டில் திமுகவுக்கு என்று ஒரு கட்சி அலுவலகம் கூட உண்டு. அங்கு அக்கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. அந்தக் கூட்டத்தில் இதுவரை அனைத்து விவகாரங்களுக்கும் டி.ஆர்.பாலுவே முடிவெடுத்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், தற்போது, திமுகவின் தலைமை வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, டி.ஆர்.பாலுவுக்கு பதிலாக பாராளுமன்ற கட்சித் தலைவராக கனிமொழி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த மாற்றத்தின்படி இனி கனிமொழிதான் அரசின் அனைத்துக் கூட்டங்களுக்கும் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால், திமுகவின் பார்லிமென்ட் குழு தலைவர் என்ற வகையில் கனிமொழிக்கு நாடாளுமன்ற இருக்கையில் முன்னுரிமை அளிக்கப்படுமா அல்லது மூத்த தலைவர் என்ற அடிப்படையில் டி.ஆர்.பாலுவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற செயலகம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை அறிய திமுக மட்டுமின்றி, அரசியல் ஆர்வலர்கள் பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், கட்சி தலைமை தரும் பட்டியலில், யாருடைய பெயர் முதலில் இருக்கிறதோ, அவருக்குத்தான் முதல் வரிசையில் இருக்கை வழங்கப்படும். அதேபோல், தனது கட்சியில் யார் என்ன பேச வேண்டும் என்பது குறித்த அனைத்தையும் அவர்தான் முடிவு செய்வார். இந்த நிலையில்தான், முன்வரிசை இருக்கையை பெறப்போவது பாராளுமன்றக் கட்சி தலைவரா அல்லது கட்சியின் சபைத் தலைவரா என்ற விவகாரம் ஏற்பட்டு இருக்கிறது. இதில், மூத்த தலைவர் என்ற விவகாரமும் இருப்பதால், முன்வரிசை இருக்கையை கனிமொழிக்கு டி.ஆர்.பாலு விட்டுக்கொடுப்பாரா அல்லது தாமே வைத்துக் கொள்வாரா என்பது இனிதான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்:
வெடிகுண்டு மிரட்டல்… சென்னை நோக்கி வந்த விமானம் பாதியிலேயே தரையிறக்கம்!
டி.ஆர்.பாலு - கனிமொழி

அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும், முறைப்படி கனிமொழிக்குத்தான் இனி தகவல் தொடர்புகள் அனுப்பப்படும். அவர்தான் அந்தக் கூட்டங்களுக்குச் செல்வார். அவர் விரும்பினால் அவருடன் யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம். இதுதவிர, பார்லிமென்டில் நிறைய கமிட்டிகள் அமைக்கப்படும். நிலைக் குழு, தேர்வுக் குழு, ஆலோசனைக் குழு, நூலகக் குழு என ஒவ்வென்றுக்கும் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்களில் திமுக தரப்பில் யாரைத் தலைவராக அமர்த்துவது என்பதை அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவர்தான் முடிவு செய்து பரிந்துரைக்க வேண்டும். தற்போது வரையில் திமுக சார்பில் இவற்றையெல்லாம் டி.ஆர்.பாலுதான் செய்து வந்தார்.

மேற்கண்டவற்றில் முக்கியமானது, நிலைக்குழு தலைவர் பதவி. இந்தப் பதவி திமுகவுக்கு நிச்சயம் ஒன்று கிடைக்கும். முயற்சி செய்தால் இரண்டு கூட கிடைக்கலாம். இந்தப் பதவிக்கென நிறைய சலுகைகள் உண்டு. பார்லிமென்டில் தனி அலுவலகம், உதவியாளர் என பல விஷயங்கள் உள்ள நிலையில், திமுகவுக்கு கிடைக்கப்போகும் அந்தப் புதிய நிலைக்குழு தலைவர் பதவியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

மேற்கண்ட விஷயங்கள் எல்லாவற்றிலும் கனிமொழிக்கே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. இவை அனைத்துக்கும் அவரே தலைமையேற்று வழிநடத்தப்போகிறாரா? அல்லது மூத்த தலைவர் என்ற முறையில் டி.ஆர்.பாலுவையும் உடன் சேர்த்துக்கொண்டு முடிவெடுக்கப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு திமுக பார்லிமெண்ட் உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com