LGBTQ ஆதரவான வாட்ச் பறிமுதல்:மலேசியாவில் வழக்கு!

LGBTQ ஆதரவான வாட்ச் பறிமுதல்:மலேசியாவில் வழக்கு!
Editor 1
Published on

சுலாமிய நடைமுறைகளை சட்டமாகக் கொண்ட மலேசிய நாட்டில், LGBTQ என்றழைக்கப்படும் பால்புதுமையரின் பலவண்ண கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்ப்பட்டதை எதிர்த்து சுவிட்சர்லாந்து நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இசுலாமியர்கள் அதிகமாக வசிக்கும் மலேசிய நாட்டில், அந்த மதத்தின் பல நடைமுறைகள் சட்டங்களாகவும் விதிகளாகவும் உள்ளன. அதன்படி, பால்புதுமையர் எனப்படும் எல்ஜிபிடிகியூ பிரிவினரின் உரிமைகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு பாலீர்ப்பு அங்கு சட்டவிரோதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறியதற்காக, கடந்த ஆண்டில் 18 பேருக்கு சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டது.

ஊழல் முறைகேடுகளுக்காக பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த அன்வார் இப்ராகிம், மீண்டும் பிரதமர் ஆக்கப்பட்டார். அவருடைய பழைமைவாத மலாய் இன- முசுலிம் கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், பால்புதுமையர் உரிமைகளுக்காக கூடிப்பேச முயன்றவர்கள் மீதே, நடவடிக்கை எடுத்தது. தன்பாலீர்ப்பினர், இருபால் ஈர்ப்பினர், திருநர் போன்றவர்களை உள்ளடக்கிய பால்புதுமையருக்குச் சாதகமாக, தன்னுடைய அரசு செயல்படாது என அன்வார் தெளிவுபட அறிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்வாட்ச் நிறுவனம், பால்புதுமையர் விரும்பும் பலவண்ணக் கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் திடீரென இந்த வகைக் கடிகாரங்கள் விற்கப்படும் பதினாறு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டு, 172 கடிகாரங்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு கடிகாரத் தொகுப்பும் குறைந்தது 14,250 அமெரிக்க டாலர் அதாவது 64,795 மலேசிய வெள்ளி மதிப்புடையது என்று ஸ்வாட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் மலேசியாவில் தொழில்செய்யும் தங்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக, கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஸ்வாட்ச் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. தங்களின் கடிகாரங்கள் எந்த வகையிலும் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கவோ நெறிமுறைகளைக் குலைப்பதாகவோ இல்லை என்றும் அது தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பறிமுதல் விளக்க அறிக்கையில், அந்த கடிகாரங்கள் பால்புதுமையினரின் உரிமைகளைப் போற்றுவதாகவும் மலேசிய சட்டங்களை மீறும்படி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு அந்தக் கடிகாரங்களை மீள வழங்கவேண்டும் என்றும் ஈடுகட்ட வேண்டும் என்றும் கோரிக்கையையும் ஸ்வாட்ச் நிறுவனம் வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com