Election
Election

கரூர் ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் முறைகேடு! தேர்தல் அலுவலர், அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம்!

Published on

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்தலவாய் ஊராட்சி 6வது வார்டு கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்களுக்கு தேர்தல் நடத்தி வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுத்த தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார்.

சித்தலவாய் ஊராட்சி 6வது வார்டில் அப்போது தேர்தலை நடத்திய தேர்தல் அலுவலர்கள் இந்த வார்டு பொதுப்பிரிவு ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார். இதனால் ஆண் வேட்பாளர் ஒருவர் வார்டு உறுப்பினராக போட்டியிட்டார் . அவர் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக செய்பட்டு வந்தார். இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது.

இந்த தேர்தல் முறைகேடு குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் சித்தலவாய் ஊராட்சியில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்தனர். அதன் படி ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலருமான வெங்கடாசலம் மற்றும் துணை தேர்தல் அலுவலரான சிவகுமார் என இருவரும் முறைகேடு செய்தது உறுதியானது.

ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்களுக்கு தேர்தல் நடத்தி வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுத்த தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் என இருவரையும் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் என இருவரையும் அதிரடியாக மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்தது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com