சென்னைக்கு அருகிலுள்ள மிகப்பெரிய வரலாற்று சிறப்பிடம், மாமல்லபுரம். 1500 ஆண்டுகால கலைக்கூடம். பல்லவர் கால கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக இருக்கிறது. வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வராத நாட்களே இல்லை.
சென்னை பெருநகரம் வளர்ச்சியடையும் நேரத்தில் இன்னொரு துணை நகரம் வேண்டும் என்கிற கோரிக்கை இருந்தபோது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், அரக்கோணம் என ஏராளமான பெயர்கள் பட்டியலில் இருந்தன. அதில் மாமல்லபுரத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் சீன அதிபருடனான இந்திய பிரதமரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்தது. இருவரும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இருந்த பகுதியில் அமர்ந்து அவற்றை ரசித்தனர். அங்குள்ள சிற்பங்களை பார்வையிட்டார்கள். சீன அதிபரின் வருகைக்குப் பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு உலக அரங்கிலும் அதிகரித்தது.
கடந்த ஆண்டு 'சர்வதேச செஸ் ஒலிம்பியாட்' போட்டி இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனால் மாமல்லபுரத்திற்கு கூடுதலாக சர்வதேச கவனம் கிடைத்தது. கலை ஆர்வலர்கள் மட்டுமல்ல; விளையாட்டு வீரர்களும் உலா வரும் இடமாக இருந்தது. இதனால் சென்ற ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிகை தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு கூடுதலாக இருந்தது.
சிறப்புமிகு சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், சென்னையின் துணை நகரமாக மாற உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து அடுத்தடுத்த பணிகள் துரிதமாக நடக்க ஆரம்பித்துள்ளன.
முதல்கட்டமாக கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவை மேம்படுத்தப்பட்டன. மாமல்லபுரம் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சர்வதேச தரமுடைய ஒளி விளக்குகள் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கைவசம் உள்ள ஆளவந்தாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. துணை நகரமாவதால் மெட்ரோ ரெயில் வர வாய்ப்புண்டு என்கிறார்கள்.
புதிய துணை நகரத்திற்கு சவால்களும் உண்டு. மாமல்லபுரத்திற்கு வெளியே சாலைகள் நன்றாக இருந்தாலும் நகருக்குள் சரியான சாலை வசதிகள் கிடையாது. ஆக்கிரமிப்புகள் அதிகம். வரலாற்று புராதன சின்னங்களுக்கு இடையே ஏராளமான கடைகள் ஆக்ரமித்துள்ளன. முறையான பார்க்கிங் வசதி இல்லை. உள்ளூர் வாசிகளின் ஒத்துழைப்பின்றி நகரத்தை மேம்படுத்துவது இயலாத காரியம். துணை நகரத்தை கட்டமைப்பது பற்றி பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்கவில்லை என்கிறார்கள்.