மேற்கு வங்காளத்தில் அபிஷேக் பானர்ஜியை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். எனது கட்சி மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பா.ஜ.க. குறி வைக்கிறது, ஆனாலும் பா.ஜ.க குறித்து பயமில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தீவிரமாக திரிணமூல் - பாஜக அரசியல் மோதல்கள் எப்போதுமே இருப்பது வழக்கம் தான் . தற்போது
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் முக்கிய தலைவருமான அபிஷேக் பானர்ஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில், நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதற்கு முன்பும், மத்திய அமைப்புகள் என்னை அழைத்த போதெல்லாம், நான் ஆஜராகி முழு ஒத்துழைப்பையும் அளித்தேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அபிஷேக் பானர்ஜியை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது கட்சி மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பா.ஜ.க. குறி வைக்கிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு பயப்படவில்லை.
அபிஷேக்கிற்கு மத்திய புலனாய்வு அமைப்பு அனுப்பிய சம்மன்களின் பின்னணியில் பிஜேபி கட்சி இருக்கிறது. எங்களின் பிரச்சாரத்தின் வெற்றியை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது. மத்தியில் இருந்து பா.ஜ.க. அகற்றப்படும் வரை, அதன் கொடுங்கோன்மைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.