

மேற்குவங்கத்தில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 293 தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் அமர பாஜக தயாராகி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ்க்கு ஏற்பட்ட தோல்வி அங்கு பெரும் ஆச்சரியம் தந்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான நீண்டகால ஆட்சிக்கு முடிவு கட்டி மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியில் அமரப்போகிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தாவின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தொகுதியான நந்திகிராம் இம்முறை அவரை தோல்வியை தழுவ வைத்துள்ளது. மேலும் பாஜகவின் இந்த வெற்றி
மாநில அரசியல் வரலாற்றில் பெரிய மாற்றம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இது மேற்கு வங்க அரசியல் களத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பம் முதலே தேர்தல் ஆணையம் குறித்து பலவிதமான சர்ச்சைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்தாலும் முடிவுகளை ஏற்காத மம்தா ஜனநாயக முறைப்படி தாங்கள் வெற்றி பெற்றதாக கூறியதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். இவரது அறிவிப்பால் மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் நாங்கள் தோற்கவில்லை, பதவி விலக மாட்டேன் என்றும் ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கப் போவதில்லை என்றும், யாரும் என்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்த முடியாது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளையும் அடுக்கி உள்ளார்.
தேர்தல் ஆணைய உதவியுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் நான் தாக்கப்பட்டேன். தேர்தல் ஆணையமே உண்மையான வில்லன். நீதிமன்றம் கூட எங்களுக்கு நீதி வழங்கத் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேரை நீக்கி தேர்தல் ஆணையம் முறைகேடாக நடந்துள்ளதாகவும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் நேரடியாக தேர்தலில் தலையிட்டு ஜனநாயகத்தை சிதைத்துள்ளதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகவும்,மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வராகவும் பலமான மக்கள் ஆதரவு கொண்ட பெண் தலைவராகவும் அறியப்படும் மம்தாவின் பதவி விலக முடியாது எனும் முடிவு குறித்தும் இதன் பின் வரும் நிலை என்ன என்பது குறித்தும் மேற்கு வங்க அரசியல் நிபுணர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.