திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டி: மம்தா முடிவால் இந்தியா கூட்டணி அதிர்ச்சி!

திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டி: 
மம்தா முடிவால் இந்தியா கூட்டணி அதிர்ச்சி!

க்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்ற மம்தாவின் முடிவு இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் ஏற்படும் விரிசல்களை சிலர் பேசித் தீர்க்க முயற்சிக்கும் நிலையில் வேறுசிலர் இது எதிர்பார்த்த முடிவுதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

தனித்து போட்டியிடுவது என்று மம்தா பானர்ஜி எடுத்துள்ள முடிவு எதிர்பார்த்ததுதான் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸுடன் மம்தா இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரத்தை பொருத்தவரை கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் உத்தவ் பிரிவு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு உத்தவ் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியாக உள்ளது.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி பெண் சிங்கம் போல கர்ஜித்து வருகிறார். அங்கு அவரது கட்சி களத்தில் குதிப்பது அவருக்கு முக்கியமானது என்று சிவசேனை உத்தவ் பிரிவு தலைவர்களில் ஒருவரான ஆதித்ய தாக்கரே கூறினார்.

தில்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவருமான செளரவ் பரத்வாஜ் அரசியல் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது சவால் நிறைந்ததுதான். ஆனால், மம்தாவும் ராகுல்காந்தியும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால்தான் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிபெற முடியும் என்று தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சண்டைபோடாமல் பிரச்னையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு சிக்கல் ஏற்பட காரணமே காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரிதான். அவர் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும் என்றும் பரத்வாஜ் குறிப்பிட்டார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரான சுப்ரியா சுலே, “ மம்தா தனித்துப் போட்டி என்பதை நான் நம்பவில்லை.  நாங்கள் அவரை மதிக்கிறோம். அவர் நம்மவர். கூட்டணியில் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.

இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிக்கு மம்தாவும் அவரது கட்சியும் மிகவும் முக்கியம். அவர் ஏதாவது கூறியிருந்தால் அது அவரது உத்தியாக இருக்கலாம். இந்தியா கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. பா.ஜ.க.வை நாங்கள் வலிமையுடன் எதிர்ப்போம் என்று சரத்பவாரின் செய்தித் தொடர்பாளர் கிளைடி கிராஸ்டோ கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் இந்தியா எதிர்க்கட்சிக்கு தூண்போல் நிற்பவர் மம்தா பானர்ஜி. அவர் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்கக்கூடாது. நாங்கள் ஒற்றுமையாக போராடுவோம் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com