தங்களுக்கிடையே எத்தனையோ அரசியல் சலசலப்பு இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட நாகரீகத்தை சில உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எடுத்துக் கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடிப்பதற்கான எந்த ஒரு சிறு வாய்ப்பையும் அவர் தவறவிடுவதாக இல்லை என்ற போதும், அதே பிரதமருக்கு ஆண்டுதோறும் சிறந்த மாம்பழங்களைப் பரிசாக அனுப்பவும் அவர் மறப்பதில்லை.
"மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்த்துகள்" என்ற வாசகங்களுடன் பழங்களின் அரசனான மாம்பழ வகைகளில் வெகு நேர்த்தியாகத் தேர்வு செய்யப்பட்ட அதி சுவையான 7 மாம்பழ வகைகள் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட 4 கிலோ எடையுள்ள பெட்டியானது, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள மோடியின் இல்லத்திற்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்.
அந்த பெட்டியில் ஹிம்சாகர், ஃபாஸ்லி மற்றும் லக்ஷ்மண்போக் போன்ற பிரபலமான மாம்பழ வகைகள் இருக்கும் என்று மேற்கு வங்க மாநில அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மம்தாவின் இதே போன்ற பரிசுகள் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் ஆகியோரின் வீட்டு வாசலையும் சென்றடையும் என்கிறார்கள்.
மம்தா தீதி ஒவ்வொரு ஆண்டும் மோடிக்கு இத்தகைய பரிசுகளை அனுப்பி பரபரப்புக் கிளப்புவது வழக்கம் தான் என்ற போதும், இந்த ஆண்டு அது மேலும் முக்கித்துவம் பெறுவது எதனால் என்றால், சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த ஒடிசா கோர ரயில் விபத்து காரணமாகத்தான்! மேலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், தனது மாம்பழ ராஜதந்திரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகத்தான், 288 பயணிகளைக் கொன்ற ஒடிசா ரயில் விபத்து தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி அவர் மத்திய அரசின் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.
ரயில்வே அலட்சியத்தால் விபத்து நடந்ததாகக் குற்றம்சாட்டிய மம்தா, தான், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட மோதல் எதிர்ப்பு சாதனம் இருந்திருந்தால், பேரழிவைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார்.
“மேற்கு வங்க முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக முழு அளவிலான தனது வலுவான தாக்குதலைத் தொடங்கியுள்ளார். மாநில-மத்திய உறவில்இந்த தேசியக் கனி ஏதேனும் இனிப்பைப் புகுத்துமா? என்பதை பொறுட்திருந்து
காணலாம்.” என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கேலி செய்தார்.
இத்தகைய மாம்பழ ராஜதந்திரத்திற்கு பெயர் பெற்ற மற்றொரு தலைவர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. அவர் மோடி, மம்தா மற்றும் பல இந்திய அரசியல் தலைவர்களுக்குப் பரிசாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2,600 கிலோ பழங்களை அனுப்பினார். சராசரியாக 26 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழ உற்பத்தியுடன், நாடு முழுவதும் மாம்பழ விளைச்சலில் வங்காளம் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.