பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி: திரிணாமூல் காங்கிரஸில் வலுக்கும் குரல்!

பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி: திரிணாமூல் காங்கிரஸில் வலுக்கும் குரல்!
Published on

2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை அறிவிக்க வேண்டும் என்ற கோஷம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் வலுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திரிணாமூல் காங்கிரஸ் மாநாட்டில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த கோரிக்கையை  முன்வைத்துள்ளனர். கட்சியின் சமூக வலைத்தள பிரிவு மூலம் பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்கக் கோரும் விஷயத்தை பிரபலப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மம்தாவை பிரதமராக்க வேண்டும் என்று அகில இந்திய திரிணாமூலம் காங்கிரஸ் உறுப்பினர்கள் முகநூல்கள் மூலம் பேனர் வைத்துள்ளனர்.

மாநாட்டில் உரையாற்றிய மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரும் கொல்கத்தா மேயருமான பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ‘2024 மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் மம்தா பானர்ஜிதான் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவராக இருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘பிரதமர் பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் மம்தா பானர்ஜிதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் 42 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்வதை நாங்கள் (திரிணாமூல் காங்கிரஸ்) சபதமாக ஏற்றுள்ளோம். தேர்தலில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷும் இதை கருத்தை எதிரொலித்தார். ‘அடுத்த ஆண்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவது ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் குறிக்கோள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்ட கடுமையாக உழைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதிர்ந்த அரசியல் அனுபவம் உள்ளது. அவர் ஏழு முறை எம்பியாக இருந்துள்ளார். நான்கு முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய இதர தலைவர்களும் மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிற்க சரியான நபர் என்றும் கூறினர்.

இதனிடையே மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை வைத்தாலும் அதை எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பாஜக தலைவரும் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். ‘திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த மாட்டில் காபினெட் அமைச்சர்களும், முக்கிய தலைவர்களும் மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் இதர தலைவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை’ என்று சுவேந்து அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள 26 அரசியல் கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிக் கூட்டணி, ‘இந்தியா’வின் வலுவான தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எதிர்க்கட்சி கூட்டணி இதுவரை யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com