ஆன்லைன் மோசடியில் 25 லட்சத்தை இழந்த ஹரியானவைச் சேர்ந்த நபர்!

ஆன்லைன் மோசடியில் 25 லட்சத்தை இழந்த ஹரியானவைச் சேர்ந்த நபர்!

ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராம் பகுதியில் வசிக்கும் சுப்ரதா கோஷ் என்ற நபர் இணைய மோசடியில் சிக்கி ரூபாய் 25 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் சுப்ரதா கோஷுக்கு டெலிக்ராம் செயலியில் வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு அவர் ஆர்வம் காட்டியதால், உடனடியாக ஒரு நபர் அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபரிடம் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களைக் கேட்டபோது, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சில பணிகள் வழங்கப்படும். அந்தப் பணிகளை நீங்கள் சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் உங்கள் கணக்கிற்கு உடனடியாக பணம் வந்து சேரும் எனக் கூறியிருக்கிறார். 

குறிப்பாக உங்களுக்கு அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்து அதில் ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளை வழங்க வேண்டும் என தெரிவித்து, எளிமையாக இருக்கும் வேலையைக் கூறி ஆசையைத் தூண்டியுள்ளார். மேலும் சில ப்ரீபெய்டு பணிகளும் இருக்கிறது, அதில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் கிடைக்கும் எனக்கூறி முதலில் 10,000 ரூபாய் முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை நம்பிய சுப்ரதா கோஷ், அவர் கூறிய அனைத்துக்கும் சரியென ஒப்புக்கொண்டு அந்த நபருக்கு பச்சைக் கொடி காட்டவே, முதலில் 30 இணைப்புகளை அவருக்கு அனுப்பி 5 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்குமாறு தெரிவித்துள்ளார். இந்த வேலையை சுப்ரதா கோஷ் செய்து முடித்ததும், உடனடியாக அவருக்கென்று தனியாக உருவாக்கப்பட்ட ஒரு கணக்கில் பணம் வந்து சேர்ந்துள்ளது. இதனால் அவருக்கு இந்த வேலையின் மீது நம்பிக்கையும் அதிகரித்தது. 

பின்னர், பணத்தை முதலீடு செய்யும் திட்டத்தில் இணைந்து அங்கேயும் லாபம் வருவதைப் பார்த்திருக்கிறார். ஒரு நாள் மீண்டும் அந்த ஏமாற்றுக்காரர் இவரை அழைத்து, நீங்கள் முதலீடு செய்யும் தொகையை அதிகரிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அனுப்பப்படும் ஸ்டார் ரேட்டிங் லிங்குகளும் அதிகமாகும் என்று கூறியுள்ளார். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், இதை நம்பி பணத்தை முதலீடு செய்ததால் அவருடைய கணக்கில் பணம் சேர்ந்துள்ளது. 

சரி பணத்தை அந்த குறிப்பிட்ட கணக்கிலிருந்து எடுத்து நம்முடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என முயன்றபோது அவரால் முடியவில்லை. இதுகுறித்து தன்னைத் தொடர்பு கொண்ட நபரிடம் கேட்டபோது, "அந்த பணத்தை உங்களால் எடுக்க முடியாது. மேலும் 12 லட்சம் டெபாசிட் செய்யாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கையும் ஹேக் செய்து, இருக்கும் மொத்தப் பணத்தை எடுத்து விடுவேன்" என மிரட்டி உள்ளார். 

அந்த ஏமாற்றுக்காரரை நம்பி பல இடங்களில் கடன் பெற்று ரூபாய் 25 லட்சம் வரை இதில் முதலீடு செய்திருக்கிறார் சுப்ரதா கோஷ். அந்த நபர் மிரட்டல் தொனியில் பேசியபோது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து உடனடியாக காவல் நிலையம் சென்று நடந்த சம்பவங்களை விவரித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்னதான் காவல்துறையினர் அவ்வப்போது இணையத்தில் நடக்கும் மோசடிகள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும், அதிகமாக பணம் ஈட்டும் நோக்கில் இப்படி சிலர் விபரீதத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். எனவே இந்த பதிவை படிப்பவர்கள் இணையத்தில் சற்று ஜாக்கிரதையாகவே இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com