

ஜப்பானில் வசிக்கும் 66 வயது முதியவருக்கு லாட்டரியில் மிகப்பெரிய பரிசு கிடைத்தது. அவருக்கு மொத்தம் 60 கோடி யென் லாட்டரி விழுந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் 34 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால், இந்த லாட்டரிப் பணத்தை அவர் தனது மனைவியிடம் இருந்து மறைத்துவிட்டார். ரகசியமாக ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க அவர் முடிவெடுத்தார்.
34 கோடி அடித்த அதிர்ஷ்டம்
டோக்கியோவில் வசிக்கும் அந்த ஓய்வுபெற்ற முதியவரின் பெயர் 'எஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் முன்பு ஒரு பெரிய உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரும் இவரது மனைவியும் மாதம் 3 லட்சம் யென் (சுமார் ரூ. 1.7 லட்சம்) கூட்டு ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தனர்.
'எஸ்' தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள், அவருக்குப் பெரிய பரிசு விழுந்த தகவல் கிடைத்தது. இதற்காக அவர் வங்கியைச் சந்திக்க வேண்டி இருந்தது.
"இது நிஜமாகவே நம்ப முடியவில்லை. இந்தப் பரிசுத் தொகை மிகப் பெரியது. எனக்குச் சற்று பயமாகக்கூட இருக்கிறது" என்று அவர் சிலரிடம் கூறியுள்ளார்.
சிக்கன மனைவியிடம் சொன்ன பொய்
'எஸ்'-இன் மனைவி மிகவும் சிக்கனமானவர் எனக் கூறப்படுகிறது. அவர் வீட்டில் பீர் வாங்குவதைத் தடை செய்திருந்தார்.
மேலும், அவர்கள் பழைய, மலிவான காரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதனால் லாட்டரி விழுந்த மொத்தத் தொகையையும் அவர் மனைவியிடம் சொல்லவில்லை.
தனக்கு வெறும் 5 மில்லியன் யென் (சுமார் ரூ. 28.6 லட்சம்) மட்டுமே கிடைத்ததாக அவர் மனைவியிடம் பொய் கூறினார்.
அந்தப் பணத்தைக் கொண்டு வீட்டைப் புதுப்பிக்கப் போவதாகச் சொல்லி சமாளித்தார்.
ரகசிய சொகுசு வாழ்க்கை
உண்மையில், 'எஸ்' லாட்டரிப் பணத்தில் பல விஷயங்களைச் செய்தார். அவர் முதலில் ஒரு ஆடம்பரமான சொகுசு காரை வாங்கினார். மேலும், உயர்தர சூடான நீரூற்று விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்தார்.
ஜப்பான் முழுவதும் ரகசியமாகப் பயணம் செய்தார். இந்த ரகசிய ஆடம்பர வாழ்க்கைக்காக ஆறு மாதங்களில் மட்டும் 18 மில்லியன் யென் (சுமார் ரூ. 1 கோடி) செலவிட்டார்.
மனைவிக்கு சந்தேகம் வராமல் இருக்க, வாங்கிய சொகுசு காரை அவர் அடித்தளத்தில் நிறுத்தி வைத்தார்.
எப்போதும் பழைய உடைகளையே அணிந்து சென்றார். நண்பர்களிடம் இருந்தும் விலகியே இருந்தார்.
தனிமை தந்த பாடம்
இந்த ரகசிய சொகுசு வாழ்க்கை அவருக்கு விரைவில் தனிமையையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியது.
"இந்தப் பணம் என் சொந்த முயற்சியால் சம்பாதித்திருந்தால், நான் பெருமைப்பட்டிருப்பேன்" என்று அவர் வருந்தினார்.
"ஆனால் முயற்சி இல்லாமல் வரும் செல்வம் எனக்கு விரும்பத்தகாத நினைவுகளை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.
எல்லாப் பணத்தையும் இழந்து போன பிறகு தனது தந்தை தனிமையில் இறந்ததைக் கூட அவர் நினைவுகூர்ந்தார். இது தன் வாழ்க்கையையே உலுக்கியதாகவும் அவர் வேதனையோடு தெரிவித்தார்.
குடும்பப் பாதுகாப்புக்குத் திரும்பிய பணம்
இறுதியில், 'எஸ்' ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டார். அவர் லாட்டரிப் பணத்தில் 500 மில்லியன் யென் (சுமார் ரூ. 28.6 கோடி) தொகையை காப்பீட்டில் முதலீடு செய்தார்.
அந்தக் காப்பீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர் பயனாளிகளாக நியமித்தார்.
"நான் இறந்த பிறகு இந்தப் பணம் எனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்" என்று அவர் இறுதியாகக் கூறினார்.