மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்!

தேசிய மாம்பழம் தினம் - ஜூலை 22.
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்!

“மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம்.தித்திக்கும் மாம்பழம். அழகான மாம்பழம். அல்வா போன்ற மாம்பழம். தங்கநிற மாம்பழம். உங்களுக்கும் வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டுத் தின்னலாம்.!

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடலில் சேலம் புகழ் மல்கோவா மாம்பழம். எதற்காக இந்தப் பாடல் இப்போது? இன்று தேசிய மாம்பழம் தினமாச்சே. பழங்களிலேயே பாடலால் அனைவரிடத்தும் புகழ்பெற்ற ஒரே பழம் இதுதான். ஆம்! நம் இந்தியாவில் சுமார் 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றியதாகக் கூறப்படும் மாம்பழத்தின் சிறப்புகளை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதியை தேசிய மாம்பழம் தினமாக கொண்டாடுகிறோம் .   

குழந்தைகளின் கன்னங்களுக்கு உவமையாகும் மாம்பழத்தை விரும்பாதவர் எவருமில்லை எனலாம். மா பலா வாழை எனப்படும் முக்கனிகளில் முதன்மை யானதுடன் பழங்களின் அரசன் என்றும் மாம்பழத்தை வர்ணிக்கிறது சங்ககால இலக்கியங்கள். மாமரங்களை ஒரு முறை நட்டு விட்டால் போதும். மாங்கன்றுகள் வளர்ந்து மரமாகி பூக்கள் பூத்து காய்களாகி பின் பழங்களாக மாற நான்கு ஆண்டுகள் முதல் ஆறு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் 150 அடி வரை வளரக்கூடிய மாமரங்கள் நீண்ட வருடங்கள் நிலைத்து பலன்களைத் தரும். ஆம். அதிகபட்சமாக ஒரு மாமரம் 300 ஆண்டுகள் வரை பழங்களைத் தரும் இயல்புடையது.

உலகிலேயே மாம்பழ விளைச்சல் அதிகமுள்ள நாடாக உள்ளது இந்தியா. ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் டன் மாம்பழங்கள் இங்கு விளைகிறது. தென்னகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, அரூர், போன்ற ஊர்களில் மாம்பழத்தோட்டங்கள் அதிகம். எனினும் சேலத்தின் மல்கோவா கிளிமூக்கு இமாம்பசந்த் போன்ற வகைகள் பிரசித்தம் பெற்றவை. அதிலும் விலையுயர்ந்த மல்கோவா மாம்பழம் பணக்கார மாம்பழமாக கருதப்பட்டது அன்று. இன்று விளைச்சல் அதிகமாகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி அனைவரும் வாங்கும் விலையில் விற்பனையில் உள்ளது. மாம்பழத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் இருந்தாலும் பங்கனப்பள்ளி, அல்போன்ச, நடுச்சாலை, குண்டு, ருமேனியா, நீலம், செந்தூரம்,தோதாபுரி  போன்ற வகைகளுடன் தற்போது மார்க்கெட்டில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்களும் கிடைக்கிறது.  

இனிப்பு சுவை அதிகம் இருந்தாலும் மாம்பழங்கள் குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளதால் வயது வித்யாசம் இன்றி அனைவரும் உண்ணலாம். மேலும் விட்டமின் சி, விட்டமின் பி 6 விட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துகள் உள்ள மாம்பழத்தை கர்ப்பிணிகளும் தயங்காமல் உண்ணலாம். இதனால் கர்ப்பத்தில்உள்ள சிசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மாம்பழத்தை அளவோடு எடுத்துக் கொண்டால் இதய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி பெருகி உடல் பலத்தை தரும் ஆற்றல் கொண்டது மாம்பழம்.

தமிழில் நாம் அழைக்கும் மாம்பழம் எனும் சொல் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் “மாங்கோ” என்றழைக்கப்படுகிறது. தற்போது அறிவியல் முன்னேறி விட்டதால் மாங்காய்கள் மற்றும் மாம்பழங்கள் ஊறுகாய் ஜுஸ் போன்ற மதிப்பூட்டப்பட்ட பல விதமான உணவுகளாக மாற்றத்துடன் வருடம் முழுவதும் நாம் விரும்பும்போது எல்லாம் ருசிக்க முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com