கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம்

கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம்

அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தாயின் மணிக்கொடி காத்து, தன் உயிரை தாய் நாட்டிற்காக தியாகம் செய்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினமான இன்று, அன்னாரை போற்றும் வண்ணம் அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்!

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்காக அயராது பாடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களில் முக்கியமானவராக திகழ்பவர் தியாகி திருப்பூர் குமரன். இளம் பருவம் முதலே தேசப்பற்று மிக்கவராக திகழ்ந்த திருப்பூர் குமரன் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்திய நாட்டின் விடுதலைக்காக பல்வேறு அறப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்க அறப் போராட்டம் தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற்ற போது, ஆங்கிலேய ஆட்சியின் தடையை மீறி திருப்பூரில் நடைபெற்ற அறப் போராட்டத்திற்கு தியாகி குமரன் தலைமை தாங்கி, தேசியக் கொடியினை ஏந்தி ஊர்வலமாக சென்றார். அப்போது பிரிட்டிஷ் காவலர்கள் தியாகி குமரன் மீது தடியடிப் பிரயோகம் செய்தனர்.

இந்தத் தடியடிப் பிரயோகத்தை மீறி, 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்ற முழக்கத்துடன் முன்னேறிச் சென்றது கொடி காத்த குமரனின் தலைமையிலான இளைஞர் படை.

அப்போது பிரிட்டிஷ் காவலர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த தியாகி குமரன் அவர்கள், தான் கடுமையாகத் தாக்கப்பட்டாலும், தான் வைத்திருந்த தேசியக் கொடியைக் கீழே விடாமல் தாங்கிப் பிடித்ததனால் ‘கொடிகாத்த குமரன்’ என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாபெரும் தியாகியின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தன் உயிரை நாட்டிற்காக தியாகம் செய்த திருப்பூர் குமரனின் வீரச் செயல் இன்றும் அனைவரின் நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கிறது. இன்றளவும் மக்கள் மனங்களில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் கொடி காத்த குமரனின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com