மீண்டும் திரிபுரா முதல்வரானார் மானிக் சஹா

மீண்டும் திரிபுரா முதல்வரானார் மானிக் சஹா

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பா.ஜ.க. தலைவர் மானிக் சஹா மீண்டும் பதவியேற்றார். அவருடன் ரத்தன் லால் நாத், பரஞ்சித் சிங்கா ராய், சந்தான சக்மா, டிங்கு ராய், விகாஷ் தேவ்வர்மா உள்ளிட்ட 8 பேர் அமைச்சர் களாக பதவியேற்றனர். அவர்களுக்கு மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப் பிரமாணமும் ரகசியகாப் பிரமாணமும் செய்துவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி. கட்சியிலிருந்து 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களில் 5 அமைச்சர்கள் புதுமுகங்கள். நான்கு பேர் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள்.

60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. 32 இடங்களை கைப்பற்றியது. கடந்த 30 ஆண்டுகளாக இடதுசாரி அணிக்கு எதிரான கட்சிகள்தான் ஆட்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1988 ஆம் ஆண்டு காங்கிரஸ்-டி.யு.ஜே.எஸ். கூட்டணி இடதுசாரி கட்சியினரை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், 1993 ஆம் ஆண்டு அந்த கூட்டணி மீண்டும் கம்யூனிஸ்டுகளிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

2022 ஆம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த விப்லப் குமார் தேவுக்கு மக்களிடையே செல்வாக்கு குறைந்ததை அடுத்தும், சட்டம் ஒழுங்கில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்தும் அவருக்கு பதிலாக மானிக் சஹா முதல்வராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரான மானிக் சஹா, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். 2023 தேர்தலில் பர்தோவாலி தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளரான ஆஷிஷ் குமார் சஹாவை 1257 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

விப்லப் குமாருக்கு பதிலாக அவர் சுமார் 10 மாதங்களே முதல்வராக இருந்தாலும், மாநிலத்தில் தனக்கென தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.

பல் மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள மானிக் சஹா, முன்னர் ஹபானியாவில் உள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com