மணிப்பூர் வன்கொடுமை: பாஜகவில் இருந்து விலகினார் புதுவை முன்னாள் எம்பி கண்ணன்!

மணிப்பூர் வன்கொடுமை: பாஜகவில் இருந்து விலகினார் புதுவை முன்னாள் எம்பி கண்ணன்!
Published on

நாடே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை அரங்கேறி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து பலரும் பலவிதத்தில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மணிப்பூர் சம்பத்தை கண்டிக்கும் விதமாக, ‘பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை’ என்று புதுச்சேரி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘‘மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான மிகவும் அவமானகரமான செயல் இந்தியர்களை மட்டுமல்ல, உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி, மிகப்பெரிய கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்தக் குரூரமான செயலுக்கு எந்தவிதமான சாக்கு போக்கும் சொல்லாமல் மணிப்பூர் மாநில அரசும் மத்திய அரசும் இந்தக் கொடூரத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு முடிந்தவரை அதை சீர்செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். மணிப்பூர் முதல்வரை அந்தப் பதவியிலிருந்து நீக்கி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரம் எந்த வகையான மற்ற குற்றங்களுடனும் ஒப்பிடவே கூடாது – முடியாது. ஏனென்றால், இந்த சம்பவம் பொதுமக்களுக்கு இரண்டரை மாதங்கள் கழித்துதான் தெரியவந்துள்ளது. அதுவும் அந்த சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகுதான் எல்லோருக்கும் தெரியவந்தது. இந்த இரண்டரை மாதம் என்பது பல விசாரணைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இந்தக் கொடுமையைக் கண்டிக்க எந்த வார்த்தையும் எனக்குக் கிடைக்கவில்லை. காட்டுமிராண்டித் தனமான, மனித குலத்துக்கு, குறிப்பாக பெண் குலத்துக்கே இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி, கொடூரம், குரூரம். மனசாட்சி உள்ள யாரும் இதைக் கடுமையாக கண்டிக்காமல் இருக்க முடியாது. இது சம்பந்தமாக என்னுடைய கடுமையான கண்டனங்களை மத்திய பாஜக அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரபூர்வமாக இப்போது நான் அறிவிக்க விரும்புவது பாஜகவுக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என்பதே. பொதுமக்களுக்கான எனது பணியும் போராட்டமும் என்றும் தொடரும்” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com