மணிப்பூர் கலவரம்: இணையதள சேவை தடை ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பு!

மணிப்பூர் கலவரம்: இணையதள சேவை தடை ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பு!
Published on

ணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மெய்தி மற்றும் குகி சமூக மக்களுக்கிடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய இந்த மோதல், நாளடைவில் வன்முறையாக மாறி பின்னர் அதுவே கலவரமாக வெடித்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீ வைப்பு மற்றும் கலவரம் என பல தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கலவர மோதலில் இதுவரை சுமார் 130 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலவரத்தின் காரணமாக அம்மாநில மக்கள் சுமார் ஐம்பதாயிரம் பேர் ஆங்காங்கே அமைக்கப்பட்ட முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த பதிமூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் அந்த மாநிலத்தில் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கலவரம் தொடர்பாக சமாதானம் செய்ய முயன்றும், அது பலனளிக்கவில்லை. இதன் காரணமாக மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிக்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் கலவரம், வன்முறைகள் தொடர்பான வதந்தி செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வந்ததால், மேலும் வன்முறைகள் தீவிரமானது. இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இம்மாநிலத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, இணையதள சேவை தடைக்காலத்தை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த இணையதள சேவைக்கான தடைக்காலம் ஜூலை மாதம் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com