மணிப்பூர் கலவரம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் நாளை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு!

மணிப்பூர் கலவரம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் நாளை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு!
Published on

ணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பு சமூக மக்களிடையே பயங்கர கலவரம் நடைபெற்று வருகிறது. இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. இந்த வன்முறை குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் நாடாளுமன்ற அவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி பதில் ஏதும் கூறாத நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தினமும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த நோட்டீசும் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் சூழலில், வரும் 8ம் தேதி இது குறித்தான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்து, அதன்படி இரண்டு நாள் பயணமாக 21 பேர் கொண்ட குழு டெல்லியிலிருந்து மணிப்பூருக்குச் சென்று, அங்கு நிலவும் சூழலை நேரடியாக ஆய்வு செய்து வந்தது. அதைத் தொடர்ந்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை சந்திக்க இருக்கின்றனர்.

இந்திய ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது, மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அவரிடம் மனு ஒன்றையும் அளிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது பற்றி அவரிடம் முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com