மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார் . அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் மாற்றம் நடைபெற உள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சில அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளை மாற்றவும் முதலமைச்சர் முடிவு செய்துள்ள நிலையில், அது தொடர்பான அறிவிப்பும் இன்று வெளியிடப்படவுள்ளது. அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வும் ஆன டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவிக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநரின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதேபோல் தலைமைச்செயலாளராக இருக்கும் இறையன்பு, அடுத்த மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரை தலைமை தகவல் ஆணையராக நியமித்து புதிய தலைமைச்செயலாளர் குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய துறைகளை கவனிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.