சோழர்கால வலங்கைப் படைவீரர்களின் கையெழுத்துப் பிரதி!

சோழர்கால வலங்கைப் படைவீரர்களின் கையெழுத்துப் பிரதி!

கன்னியாகுமரி மாவட்டம் மாங்கரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவரிடம் பனையோலைப்பிரதி ஒன்று கிடைத்திருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பிரதியில் தமிழகத்தின் புகழ்பெற்ற சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த வலங்கைப்படை வீரர்கள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றனவாம். வலங்கைப்படை என்பது சோழர்களது படைப்பிரிவினரில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒன்று. அந்தப் படையைச் சேர்ந்தவர்களே சோழ மன்னர்களுக்கு போர்ப்பயிற்சி தருவது வழக்கம் என்கிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் இவர்கள் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து பின்வாங்கி அங்கிருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் பக்கம் சென்று விட்டதாக இந்த கைப்பிரதி கூறுகிறது.

பனையோலைப் பிரதியின் காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருந்த போதிலும் அதில் உள்ள தகவல்கள் கிபி 11 முதல் 13 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களைப்பற்றியதாக இருக்கிறது. கரிகாலச் சோழன் முதல் குலோத்துங்க சோழன் வரையிலான தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன என்கிறார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த கையெழுத்தியல் நிபுணரான தாமரைபாண்டியன்.

சித்த மருத்துவரிடமிருந்து கிடைத்துள்ள இந்த பனையோலைப் பிரதி மூலமாக சோழர்களின் வீழ்ச்சி குறித்தும் , அதற்குப் பின் அவர்கள் என்னவானார்கள்? சோழர்காலத்தில் செல்வாக்குடன் இருந்து பின்பு தேய்ந்து காணாமல் போன பிற குலங்கள் என்னவாயின என்பது குறித்தும் ஒரு தெளிவான சித்திரத்தை நாம் பெற முடியும் என்கிறார் அவர்.

சோழர்களின் வலங்கைப்படை என்பது சுமார் 108 குலங்களை உள்ளடக்கியது. இன்றைய நாடார் குலமும் அதில் ஒன்று. கிடைத்துள்ள பனையோலைப் பிரதியில் இடம்பெறும் உய்யக்கொண்ட நாடார் எனும் சொற்பிரயோகம் மூலமாக நாம் அதை அறிந்து கொள்ள முடியும் என்கிறார் அவர்.

மொத்தம் 250 பனையோலைகள் அந்த மொத்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றாகப் படித்துப் பொருள் கொள்ள வேண்டும். இது தவிர சோழர் காலத்து வலங்கைப்படை வீரர்களின் கதையை அறிய கன்னியாகுமரிப் பகுதியில் “தம்பி துணை” என்றொரு நாடகமும் நிகழ்த்தப்படுகிறது எனும் தகவலையும் அவர் தந்திருக்கிறார்.

இந்த நாடகம் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் அந்தப் பக்கத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்த வலங்கை வீரர்கள் மூலமாக இன்றளவும் வழக்கத்தில் இருந்து வருகிறதாம்.

பிரதியின் மொத்தத் தகவல்களும் வாசிக்கப்பட்டு தொகுக்கப்படுமானால் நாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வலங்கை வீரர்கள் மற்றும் சோழர்களின் வீழ்ச்சி எவ்விதம் நிகழ்ந்தது என்பது குறித்த மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்கிறார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com