தில்லி சுல்தான்புரியில் கஞ்சாவாலா பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் அஞ்சலி 12 கி.மீ. தொலைவு இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்தார்.
இந்த விபத்து கடந்த புத்தாண்டு தினத்தன்று நடந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண், டிச. 31 ஆம் தேதி அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு விட்டு, நள்ளிரவு 3 மணிக்கு தோழியுடன் வீடு திரும்பியபோது கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியது. இந்த விபத்தில் காரின் அடியில் சிக்கிய அந்த பெண் 12 கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. தலையில் அடிப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அஞ்சலியுடன் பின் இருக்கையில் அமர்ந்துவந்த நிதி என்ற பெண் விபத்து நடந்த இடத்திலிருந்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்குச் சென்றுவிட்டது தெரியவந்தது.
தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக தீபக் கன்னா, மனோஜ் மித்தல், அமித் கன்னா, கிருஷன் மற்றும் மிதுன் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இதனிடையே அஞ்சலியுடன் சென்ற தோழி நிதி, அளித்துள்ள வாக்குமூலத்தில் அஞ்சலி குடித்துவிட்டு ஸ்கூட்டர் ஓட்டியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் விபத்தை பார்த்து பயந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால், பிரேத பரிசோதனையில் அஞ்சலி மதுபானம் குடித்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அஞ்சலியின் தாயாரை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியதுடன், தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாக கூறியிருந்தார்.
இதனிடையே இந்த சம்பவத்தை மறைக்க முயன்றது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடிவந்தனர். அவர்களில் காரின் உரிமையாளர் அசுதோஷ் என்பவர் வெள்ளிக்கிழமை (ஜன. 6) காலை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த அன்று காரை ஓட்டிச் சென்றது அமித் கன்னாதான் தீபக்கன்னா அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் தீபக் கன்னா வீட்டில்தான் இருந்திருக்கிறார். ஆனால், அமித் கன்னாவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் அவரை காப்பாற்றும் வகையில் தாம் காரை ஓட்டியதாக அமித் கன்னா கூறியதாக போலீஸார் மேலும் கூறினர்.