ஈகுவடோரியல் கினியாவில் பரவும் மார்பர்க் வைரஸ்-க்கு 9 பேர் பலி; எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!
ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவலால் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாக, உலக சுகாதார அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
சில ஆண்டுகளாக கொரோனாவில் ஆரம்பித்து, உலகம் முழுவதும் பலவிதமான வைரஸ் தாக்கத்தால் உயிர் பலிகளும் ஏற்பட்டு அதிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், இன்னும் ஒரு சில நாடுகளில் புதுப்புது வைரஸின் தாக்கங்கள் அவ்வப்போது இருந்து வருகிறது. அதன்படி, தற்போது, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் குறித்து தெரியவரவே, உடனே அதுகுறித்து உலக சுகாதார அமைப்பிடம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வைரசைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மார்பர்க் வைரசானது, எபோலா வைரசைப் போலவே, அதே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குடும்ப வகையை சேர்ந்தது. அதிகமாக பரவும் தன்மை கொண்ட இந்த வைரசானது, 88 சதவீத அளவு உயிரிழப்பை ஏற்படுத்த கூடியதாகும்.
இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர் தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் உடல்நலம் மோசமடைவது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். அதுமட்டுமல்லாமல், இந்த வைரசால் பாதிக்கப்படும நோயாளிகளில் பலருக்கும் 7 நாட்களில் கடுமையான ரத்த கசிவு அறிகுறிகளும் ஏற்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை சோதித்து பார்த்ததில், அவர்கள் மார்பர்க் வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில், மார்பர்க் வைரஸ் பரவல் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அதை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 500 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு சாதனங்களையும் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.