மார்ச் 14 - உலக ‘பை’ தினம்!

March 14 - World Pi Day
மார்ச் 14 - உலக ‘பை’ தினம்!

பை என்றவுடன் அன்றாடம் பயன்படுத்தும் கைப் பை போன்றதோ என்று நினைத்துவிடாதீர்கள். இது கணக்கு சம்பந்தப்பட்ட சமாச்சாரம். பள்ளியில் வட்டத்தின் பரப்பை அறியும் சூத்திரத்தைப் படித்திருப்பீர்கள்தானே? அதை ஒரு கணம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள். ΠR என்பது ஞாபகம் வருகிறதல்லவா? அதேதான்! அந்த சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் Π என்னும் கிரேக்க எழுத்தைத்தான் ‘பை’ என்கிறார்கள். 

Π என்ற குறியீட்டை 1706ஆம் ஆண்டு வில்லியம் ஜோன்ஸ் என்ற பிரிட்டிஷ் கணிதவியலாளர் புழக்கத்துக்குக் கொண்டுவந்தார்.

பையின் மதிப்பு 22/7 அதாவது சுமாராக 3.14159. புள்ளிக்குப் பிறகு வரும் எண்கள் பல கோடிகளைத் தாண்டும். இந்த தினத்தில் புள்ளிக்குப் பின் வரும் எண்களைப் பிழையில்லாமல் சொல்லும்  போட்டிகள் நடக்கின்றன. சீன நாட்டவரான லு சாவோ என்ற மாணவர் 24 மணிநேரம் 4 நிமிடங்களில் புள்ளிக்குப் பிறகு 67,890 எண்களைப் பிழை இல்லாமல் ஒப்பித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

2019, நவம்பர் மாதத்தில்  யுனெஸ்கோ அமைப்பின் 40ஆவது கூட்டத்தில், பை தினத்தை சர்வதேச கணக்கு தினமாகவும் (International Day of Mathematics) அனுசரிப்பதென்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அது சரி… இந்த ‘பை’ தினத்தைத் தேர்ந்தெடுக்க மார்ச் 14ஆம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்?  ப (Π)ன் மதிப்பு 22/7 அதாவது சுமாராக 3.14. மூன்று என்பதை மூன்றாவது மாதமான மார்ச்சுக்கும், பதினான்கு என்பதை 14ஆம் தேதிக்கும் பொருத்திவிட்டார்கள். அதாவது பை தினம் = 3.14 =மார்ச், 14ஆம் தேதி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com