’புதிய பறவை’ திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சேர்ந்திடக் கண்டேனே’ என்ற பாடலுக்கு அற்புதமாக நடித்திருப்பார். முத்தம் கொடுத்துச் சேர்வது ஒருபுறம் இருக்கட்டும். நாள்தோறும் நம் வாசலில் திரிந்த சிட்டுக்குருவிகளை இன்றைக்கெல்லாம் பார்க்க முடிகிறதா? அவை எல்லாம் எங்கே போயின? என்ற கேள்விகள் அலையடித்ததன் விளவுதான் இந்தத் தினம்.
நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி (Nature Forever Society) என்ற அமைப்பு இந்த தினத்தை அனுசரிக்கும் முயற்சிகளை 2006ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்தது. முஹம்மது திலாவர் என்ற இந்தியர்தான் இந்த அமைப்பை நிறுவியவர். ‘முதலில் நமது வீட்டுக்கருகில் இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்போம். அப்புறம் காட்டில் இருக்கும் புலிகளைக் காப்பது பற்றி யோசிக்கலாம்’ என்பது திலாவரின் புகழ்பெற்ற வாசகம்.
சிட்டுக்குருவிகளைக் காப்பது தொடர்பான பதாகைகளை ஏந்தி இந்தத் தினத்தில் ஊர்வலம் வருகிறார்கள். விழிப்புணர்வு முகாம்களும் கண்காட்சிகளும் நடத்துகிறார்கள். வெய்யில் காலங்களில் ஒரு குவளையில் நீரை வீட்டுப் புழக்கடையில் வைத்துப் பாருங்கள். சிட்டுக்குருவிகள் உட்பட எத்தனை சிறு பறவைகள் தாகம் தீர்த்துக்கொள்கின்றன என்பதைக் கண் குளிரக் காண்பீர்கள். இன்றைய தினத்தில் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறார்கள். சிட்டுக்குருவிகள் தென்படும் இடங்களில் அவற்றுக்குத் தானியங்கள் தருகிறார்கள். இணையத்தில் அவை பற்றிக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். செயற்கைக் குருவிக்கூடுகளை வீடுகளில் தொங்க விடுகிறார்கள்.
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு என்பது ஒரு குறியீடுதான். சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பதே இதன் அடிநாதம். “விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போல” என்பது பாரதியாரின் புகழ்பெற்ற வரிகள்.
கூடுதலாக சில குட்டிச் செய்திகள்:
2010ஆம் ஆண்டு இந்தியத் தபால் துறை சிட்டுக்குருவியும், புறாவும் உள்ள தபால்தலையை மார்ச் 20ஆம் தேதி வெளியிட்டது.
சுற்றுச்சூழலைப் பேணிக்காகப்பவர்களுக்கு ’சிட்டுக்குருவி விருது’ என்பதை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 2011 மார்ச் 20 ல் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
2012ஆம் ஆண்டு, அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், சிட்டுக்குருவியை டெல்லியின் மாநிலப் பறவையாக அறிவித்தார்.