காட்டுத் தீ பரவ இத்தனை காரணங்களா? கவனியுங்கள் மக்களே!

மார்ச் 21 - உலக வன நாள்!
காட்டுத் தீ பரவ இத்தனை காரணங்களா? கவனியுங்கள் மக்களே!

வனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் தினம்தான் ‘உலக வன நாள்’. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் தேதியன்று உலகெங்கும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

1971 ஆம் ஆண்டு ஃபுட் அண்ட் அக்ரிகல்சுரல் ஆர்கனைசேஷன் என்னும் அமைப்பு, உலக வன நாளை மார்ச் 21 ஆம் தேதி கொண்டாட வேண்டும் என முடிவுசெய்தது.

 இந்த நாளில் வனப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன; மரம் நடு விழாக்கள் கோலாகலமாக இந்த நாளில் நடைபெறுகின்றன.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 

காடும் உடையது அரண்  

என்று ஒரு நாட்டுக்கு அரணாகக் காடு இருப்பதை வள்ளுவர் சொல்கிறார். ஒரு நாடு வளமுடையது என்றால் அதில் மூன்றில் ஒரு பகுதி வனங்களாக இருக்க வேண்டும். மழை பொழிய வைப்பது, வன உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பது, கட்டுமானப் பொருட்களைத் தருவது, மண் அரிமானத்தைத் தடுப்பது, சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது, அந்நியச் செலாவணியை ஈட்டுவது, அரிய வகை மூலிகைகள் விளையும் இடமாக இருப்பது, நீரை வேர்கள் மூலம் தேக்கிப் பெரும் நீராதாரமாக விளங்குவது,  அணைகளில் சேறு நிறைவதைத் தடுப்பது, பல நதிகளின் உற்பத்திப் பகுதியாகவும் நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குவது, மனமகிழ்ச்சியை அளிப்பது என்று காடுகளின் பெருமைகளைச் சொல்லிகொண்டே போகலாம்.

ஒரு நாடு வளமுடைய நாடாக இருக்க வேண்டும் என்றால் வனங்கள் அதிக அளவில் இருக்கவேண்டும். வனங்களுக்கு வெளியேயும் மரங்களை நட்டுப் பராமரித்தால் மட்டுமே இது சாத்தியம். இதைக் கருத்தில்கொண்டுதான் இன்றைய தினத்தில் உலகெங்கும் மரக் கன்றுகள் நடப்படுகின்றன.

வனங்களுக்கு அழிவை ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளாக நான்கினை குறிப்பிடலாம் திருட்டு வெட்டு, ஆக்கிரமிப்பு, அதிக அளவிலான வரைமுறையற்ற கால்நடை மேய்ச்சல் மற்றும்  வனத் தீ ஆகியனவாகும்.

திருட்டு வெட்டுக்களால் உடனடியாக வனப் பரப்பு குறைகிறது. காட்டின் அரிய மரங்கள் காணாமல் போகின்றன. வனத்தின் முடிப்பரப்பு மோசமாக பாதிக்கப்படுகிறது.

ஆக்கிரமிப்பைப் பற்றி அனைவருக்கும் தெரியும். வனப் பரப்பை ஒட்டி வசிப்பவர்கள் வன எல்லைகளுக்குள் புகுந்து, வன நிலப் பரப்பை ஆக்கிரமிப்பதன் மூலம் வனத்தின் பரப்பு நேரடியாகக் குறைகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் மரங்கள், புல், பூண்டுகள் போன்றன அப்புறப்படுத்தப் படுவதாலும் நேரடியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதீதமான முறையற்ற கால்நடை மேய்ச்சலால் வனத்தில் முளைத்திருக்கும் அரியவகைத் தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் மேயப்படுகின்றன. கால்நடைகளின் குளம்புகள் அடிக்கடி படுவதால் வனத்துக்குள் பாதை ஏற்பட்டு மண் கெட்டித்துப்போகிறது. அதனால் மழைநீர் மண்ணுக்குள் ஊடுருவுவது தடையாகிறது. நிலத்தடி நீர்மட்டமும் மாசடைகிறது.

இவற்றையெல்லாம் விட மீட்டெடெடுக்க முடியாத பேரழிவை காட்டுத் தீ உண்டாக்கிவிடுகிறது. எனவே வனப் பகுதிக்குள்ளோ அல்லது அதன் அருகிலோ செல்லும்போது தீப் பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லுவது ஆகாது.

அடிக்கடி வனங்களில் தீ ஏற்படுவதை ஊடகங்களில் நாம் பார்க்கிறோம். இப்படி வனங்களில் தீ ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சில சமயம் மூங்கில்கள் தாமாகவே ஒன்றுடன் ஒன்று உரசி, காடுகளுக்குள் தீ ஏற்படக் காரணமாகிறது. சில சமயங்களில் மின்னல்கள் மரங்களைத் தாக்கும்போதும் தீ பரவும்.

அணையாத சிகரட் போன்றவற்றை அஜாக்கிரதையாக மக்கள் காடுகளில் வீசுவதனாலும் வனத் தீ ஏற்படும். சில சமயங்களில் விஷமத்தனமாக வேண்டுமென்றே சிலர் தீ மூட்டிவிடுவதும் உண்டு. வனக் குற்றங்களில் ஈடுபட்டோர், தமக்குத் தண்டனை கிடைக்கக் காரணமான வனப் பணியாளர்கள் பொறுப்பேற்றிருக்கும் வனப் பகுதிகளுக்குப் பழிவாங்கும் நோக்கத்தில் தீ ஏற்படுத்திவிடுவதும் உண்டு. சில சமயங்களில் வனப் பகுதிக்கு அருகில் செல்லும் ரயில் எஞ்சின், வாகனங்கள் போன்றவற்றில் இருந்து கிளம்பும் தீப் பொறி, பெருத்த வனத் தீ ஏற்பட வாய்ப்பை உருவாக்கிவிடும்.

வனப் பகுதிகளுக்குள் சமைப்பதன் மூலமும் சுற்றுலா செல்வோர் கூட ஓர் விதத்தில் தீ பரவக் காரணமாகின்றனர். சில மலைவாழ் மக்கள், இறந்த உடல்களை வனத்துக்குள் எரிக்கும்போதும் காட்டில் தீப்பிடிப்பதுண்டு.

மலைத் தேன் சேகரிப்பதற்காகத் தேன்கூடுகளில் வைக்கும் தீ பரவி பெரும் வனத் தீயாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

காடுகளுக்கு அருகே சாலைகள் அமைக்கும்போது, தார் காய்ச்சும் எந்திரத்தில் இருந்து பறக்கும் சிறு நெருப்புப் பொறிகூட காட்டுத் தீ ஏற்படக் காரணமாகிவிடும். வனப் பகுதிகளுக்கு ஊடாகச் செல்லும் மின் கம்பங்களில் உள்ள கம்பிகள் எதேச்சையாக உரசும்போது கிளம்பும் தீப்பொறியினாலும் தீ பற்றக்கூடும்.

வனப் பகுதிக்குள் கால்நடைகளை மேய்ப்பவர்கள் கோடைக் காலத்தில் வனத் தரைகளில் தீ வைப்பார்கள். இதனால் தேவையற்ற இலை, தழைகள் எரிந்து சாம்பலாகி, அந்த உரத்தின் உதவியால் அடுத்துப் பெய்யும் மழைப் பருவத்தில் கால்நடை மேய்ச்சலுக்குப் புற்கள் அதிக அளவில் முளைக்கும் என்பதற்காக வனத்தில் தீயை மூட்டுவார்கள். ஆனால் கவனக் குறைவால் அதுவே பெரும் காட்டுத் தீ ஏற்படக் காரணமாகிவிடுவதும் உண்டு.

வனத்துக்குள் ட்ரெக்கிங் வரும் சில இளைஞர்கள்  ‘கேம்ப் ஃபையர்’ என்று விளையாட்டாகக் குளிர்காய்வதற்கு மூட்டும் நெருப்பு எதிர்பாராவிதமாகப் பரவிவிடும். வனப் பகுதிக்குள் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுபவர்களின் அடுப்பிலிருந்து பறக்கும் தீப் பொறி கூட பெரும் வனத் தீ மூளவும் ஒரு காரணியாக மாறிவிடுவதும் உண்டு.

காரணங்கள் எதுவானலும் வனத் தீயினால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். பல வகையான மரங்கள், வன விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்றன அழியும் சாத்தியங்கள் உண்டு. தரை மட்டத்தில் இருக்கும் அரிய வகைத் தாவரங்கள், அவற்றின் விதைகள் போன்றன தீயில் கருகிச் சாம்பலாகும். அண்மையிலுள்ள குடியிருப்புகளுக்கு வனத் தீ பரவினால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படும்.

தாங்கள் வசிக்கும் இடத்தில் தீ ஏற்பட்டதால் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடி வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயமும் உண்டு. பறவைகளின் கூடுகள், விலங்குகள் வாழும் பொந்துகள் போன்றவையும் முற்றாக அழியும். சூழும் புகையால் சுற்றுச் சூழல் மிக மோசமாக பாதிப்படையும்.

இயற்கைச் சமன்பாட்டைப் பேணிக்காக்கும் நுண்ணுயிர்கள் அடியோடு அழியும். நீர்நிலைகள் மாசுபடும். தரைப் பகுதி கெட்டிப்பட்டு, மழை நீர் தரையில் ஊடுருவி இறங்கத் தடை ஏற்படும். வன நில வளம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

எனவே வனங்களுக்கு சுற்றுலா செல்லும்போது மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எங்காவது வனத்தில் புகை தென்பட்டால் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தால் பெரும் வனச் சேதத்தைத்  தவிர்க்கலாம்.

வனங்களுள் செல்லும்போது வன விலங்குகளுக்கு உணவுகளை அளிப்பது தவறு. அப்படிச் செய்தால் இயற்கையான உணவைத் தேடாமல், அவை மனித நடமாட்டம் உள்ள இடத்துக்கு வந்து உணவுக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்படும். அதே போல பயன்படுத்தப்பட்ட பாலிதீன் பொருட்கள், பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வனத்துக்குள் எரியாமல் இருப்பது மிக முக்கியம். பாலிதீன் பொருட்களை உணவோடு சேர்த்து விழுங்கும் பல மிருகங்கள், உணவுப் பாதை அடைபட்டு உயிரிழக்கின்றன. கண்ணாடி சீசாக்கள் காலில் குத்தி, கால்கள் அழுகிப் போய் பல விலங்குகள் மரிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

அன்றாடப் பொழுதுபோக்குகளான சினிமா, தொலைக்காட்சி, ஊர் சுற்றல் போன்றவற்றுடன், அடிக்கடி வனப் பகுதிக்குப் பாதுகாப்பாக ட்ரக்கிங் சென்று வனத்தை நேசிக்கலாம். அப்படி வனத்துக்குள் செல்லும்போது வனத் துறையினரின் உரிய பாதுகாப்போடு செல்வது நல்லது.

வனம் காப்போம்! வளம் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com