கோட்டை மாரியம்மன் கோவிலும் கும்பாபிஷேகமும்!

கோட்டை மாரியம்மன் கோவிலும் கும்பாபிஷேகமும்!
Published on

சேலத்தில் மட்டுமே ஏழு பேட்டை மாரியம்மன்களின் அருளாட்சி நடைபெறுகிறது. சேலம் மாரி எனப்படும் கோட்டை மாரி, செவ்வாய்ப்பேட்டை , அம்மாப்பேட்டை பொன்னமாப்பேட்டை, குமரசாமிப்பட்டி, அன்னதானப்பட்டி, குகை ஆகிய இடங்களே அம்மன் அமர்ந்து ஆட்சி செய்யும் இடங்கள்.

இதில் சேலம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள கோட்டை மாரியம்மன் கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்களால் கோட்டை அமைத்து கட்டப்பட்ட பெருமைக்குரியது. இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். தற்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் தற்போது அனைத்தும் மாறி பழமையின் அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே உள்ளது.

திருமணிமுத்தாற்றின் கரையில் அமைந்துள்ளதால் அம்மன் அபிஷேகத்திற்கு அங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பெருமையும் அதிகமாக 1982 - 1989 ஆம் ஆண்டில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஜூலையில் கும்பாபிஷேக விழா நடந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி பெருவிழா கொண்டாடப் படுவது இக்கோவிலின் சிறப்பு. இதைத்தவிர பொங்கல் தீபாவளி நவராத்திரி புத்தாண்டு உள்ளிட்ட சிறப்பு நாட்களிலும் வாரத்தில் செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் ஆகியவைகள் நடைபெறும். இந்நிலையில்  கோவிலின் கட்டடங்கள் மிகவும் பழுதாகி விட்டதால் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டுமானப் பணியை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் அரசை வலியுறுத்தியதால் இது சம்பந்தமான முன்மொழிவை கோவில் நிர்வாகம் அரசுக்கு அனுப்பியது.

அதை பரிசீலித்த அன்றைய அரசு கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்தை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. பின் திருப்பணிகள் துவங்கியதில் இருந்தே கருவறை சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் எழுந்த வண்ணம் இருந்தது. பல பிரச்னைக்கு மத்தியில் அம்மன் கருவறையகற்றப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கருவறை மண்டபம் முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல் கோவிலைச் சுற்றி மகா மண்டபம் தூண்கள் எழுப்பப்பட்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் தற்போது 95 சதவீதம் மேல் முடிக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து கோவில் அதிகாரிகள்  “சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 3 கோடி மதிப்பீட்டில் அம்மன் கருவறை, அர்த்தமண்டபம் உள்ளிட்டவைகள் கருங்கல்லால் கட்டப்பட்டு வருகிறது. கருங்கல் கட்டுமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் என்பதால் பணிகள் மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. தற்போது கருங்கல் கட்டுமான பணிகள் 95 சதவிகிதம் மேல் நிறைவடைந்து விட்டது. கருவறை மீதான கோபுரம் அமைக்கும்  பணி, சுற்று பிரகாரம் மண்டபம் உப தெய்வங்களின் சன்னதி பணிகள் நிறைவடைந்துள்ளது. ராஜகோபுரம் மற்றும் மற்ற சன்னதி கோபுரங்கள் வண்ணங்கள் பூசப்பட்டு, மேலும் ஆங்காங்கே உள்ள பழுதடைந்துள்ள பணிகளும் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஆடித் திருவிழாவில் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தரைத்தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆடி திருவிழா முடிந்த பின்பு சிறு சிறு பணிகளை முடித்து செப்டம்பரில் கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிட்டுள்ளது ” என்றனர்.

புதிதாக பொலிவு பெறும் சேலம் புகழ் கோட்டை மாரியம்மன ஆலயம் ஆயிரம் வருடங்கள் கடந்தும் மக்களைக் காக்கும் சக்தியுடன் திகழும் என்பதல் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com