மெரினா பீச் காந்தி சிலை இடமாற்றம்!

மெரினா பீச் காந்தி சிலை இடமாற்றம்!

சென்னை மெரினா பீச்சின் மிகப் பெரிய அடையாளம் காந்தி சிலை ஆகும். மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக மெரினா பீச்சில் அமைந்துள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் அதற்காக அனுமதி கோரி இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் காந்தி சிலையை இடம் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மெரினா கடற்கரையில் காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில்தான், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட 90 சதவிகிதப் பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது காந்தி சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த சிலை 20 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக காந்தி சிலையை ராட்சத கிரேன் மூலம் பீடத்தோடு பெயர்த்தெடுத்து அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் தற்காலிகமாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காந்தி சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தவோ இயலாது என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com