மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் ட்விட்டரில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ட்வீட் செய்திருக்கும் நிகழ்வு மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்கின் ட்விட்டருக்குப் போட்டியாக மார்ச் ஜுக்கர்பெர்கின் Threads செயலி நேற்று அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதை பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது வெளியான 2 மணி நேரத்திலேயே 20 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இதை டவுன்லோடு செய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அடுத்த சில வாரங்களில் கோடிக்கணக்கான மக்கள் இதில் இணைந்து திரெட் செயலியை பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என நம்பப்படுகிறது.
சமீப காலமாக ட்விட்டர் செயலியின் மீது பயனர்கள் கொண்ட அதிருப்தியை, மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு சாதகமாக சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். பொதுவாகவே எலான் மஸ்க் ட்விட்டரில் கூறும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும். ஏனென்றால் தனக்கு தோன்றுவதை சரி தவறு என தைரியமாக வெளிப்படுத்துபவர் எலான் மஸ்க். இது அவரைப் பின் தொடர்பவர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் ட்விட்டர் செயலிக்கு எதிராகவே ஒரு போட்டியாளரை உருவாக்கும் என்பதை அவர் சிந்தித்திருக்க மாட்டார்.
மார்க் ஜுகர்பெர்க், ட்விட்டருக்கு போட்டியாக ஒரு செயலி உருவாக்குகிறார் என்ற செய்தியை அறிந்ததுமே, எப்போதும் போல ட்விட்டரில் கருத்து கூறுகிறேன் என்கிற பெயரில், மார்க் ஜூகர்பெர்க்கை வம்புக்கு இழுத்தார் ஏலான் மஸ்க். இறுதியில் மாறி மாறி சோசியல் மீடியாவில் அவர்களின் வாதம் நடந்து வந்த நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாக குத்து சண்டையே போட்டுக் கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பும் வந்துவிட்டது.
இதைக் கேள்விப்படும் நமக்கு இருவரும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வது போல் தெரிந்தாலும், இருவருக்கும் இடையேயான பனிப்போர் உச்சமானதினாலேயே இப்படி நடந்திருக்கிறது. இதன் காரணமாகவே ட்விட்டரை வீழ்த்துவதற்காக Threads செயலியை வெளியிடுவதற்கு திட்டமிட்ட தேதியை விட, அதிவிரைவாக அறிமுகம் செய்து மக்களின் பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார் மார்க் ஜூகர்பெர்க்.
இந்நிலையில் சரியாக 11 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு மீம் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஜுக்கர்பெர்க். அந்த மீம் புகைப்படம் ஒரே யூனிவர்சில் இருக்கும் இரண்டு ஸ்பைடர் மேன்களைக் குறிக்கிறது. அதாவது, ஒரே திறமை கொண்ட இரண்டு ஸ்பைடர்-மேன்கள் ஒரே உலகத்தில் இருப்பதாக அர்த்தம். நீங்கள் மார்வெல் படங்களை விரும்பி பார்ப்பவராக இருந்தால் இது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மார்க் ஜுகர்பெர்க் யாரையும் போட்டியாக நினைக்க வில்லை. தன்னையே தனக்குப் போட்டியாக நினைக்கிறார் என்பதை இந்த மீம் குறிக்கிறது. அல்லது எலான் மஸ்கையும் அவரையும் சமபலம் கொண்டவராக குறிக்கும் விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்பது ஜுக்கர்பெர்குக்கு மட்டுமே தெரியும்.