வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..! இனி திருமணமான மகள்களுக்கும் 'கருணைப்பணி' வேலை..!

compassionate appointments case verdict
compassionate appointments case verdictAI image
Updated on

இந்திய சமூக அமைப்பில், பெண் என்பவள் திருமணத்திற்குப் பிறகு தன் கணவன் வீட்டிற்குச் சொந்தமானவள், அவளுக்கும் பெற்றோர் வீட்டிற்கும் எந்தப் பொருளாதாரத் தொடர்பும் இல்லை என்ற தப்பான பொதுப்புத்தி பல காலமாக நீடித்து வருகிறது.

இந்த ஆணாதிக்கச் சிந்தனையின் நிழல், அரசு வேலைவாய்ப்பு விதிகளிலும் படிந்திருந்தது. அதன் விளைவுதான்,பணியின் போது இறக்கும் அரசு ஊழியர்களின் "திருமணமான மகள்களுக்கு" கருணைப்பணி நியமன வேலை (Compassionate Appointment) மறுக்கப்பட்டு வந்த அவலம்.

பல்வேறு மாநில அரசுகளின் பொதுப்பணி விதிகளில், கருணைப்பணி வேலைக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய வாரிசுகள் பட்டியலில் 'மகன், திருமண ஆகாத மகள், விதவை மகள்' ஆகியோரே இடம் பெற்றிருந்தனர். 'திருமணமான மகள்' என்ற சொல் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court) வழங்கிய தீர்ப்பு, பெண் உரிமை வரலாற்றில் ஒரு மைல்கல்.

நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் மிக முக்கியமாக 3 அம்சங்களைச் சுட்டிக்காட்டினர்:

1.பாலினச் சமத்துவம் (அரசியலமைப்புப் பிரிவு 14, 15): ஒரு மகன் திருமணத்திற்குப் பிறகும் பெற்றோரின் மகனாகவே கருதப்பட்டு வேலை பெறத் தகுதியுடையவன் ஆகும்போது, மகள் மட்டும் திருமணத்திற்குப் பின் வாரிசு என்ற தகுதியை எப்படி இழக்க முடியும்? இது அப்பட்டமான பாலினப் பாகுபாடு.

2.திருமணம் என்பது தகுதியிழப்பு அல்ல:திருமணம் ஒரு பெண்ணின் சிவில் நிலையை (Civil Status) மாற்றுமே தவிர, அவளது பெற்றோருக்கு அவள் மகள் என்ற பிறப்புரிமையையும், இரத்த உறவையும் துண்டித்துவிடாது.

3.சார்ந்து வாழ்தல்' (Dependency) மட்டுமே தகுதி: கருணைப்பணி வேலையின் நோக்கமே, அந்த அரசு ஊழியரை நம்பி வாழ்ந்த குடும்பத்தைக் காப்பாற்றுவதுதான். எனவே, திருமணமான மகளாக இருந்தாலும், அவளுடைய கணவன் வருமானம் இல்லாதவராகவோ அல்லது அவள் தன் பெற்றோரைப் பொருளாதார ரீதியாகச் சார்ந்து வாழும் சூழலிலோ இருந்தால்,அவளுக்கு வேலை மறுப்பது சட்டவிரோதமானது.

இந்தத் தீர்ப்பு, பெற்றோரை காக்க நினைக்கும் எத்தனையோ பெண் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

திருமணமான மகள்களின் உரிமைக்கான விடியல்.இனி ஆரம்பமாகி விட்டது.

logo
Kalki Online
kalkionline.com