தோசை வெறும் உணவு அல்ல... அது ஒரு எமோஷன்! உலக உணவு பட்டியலில் மசாலா தோசைக்கு கிடைத்த கௌரவம்!

Top 100 Pancakes
Dosa Masala dosa AI
Updated on

டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் உணவு பொருட்களின் பைபிள் என்று அழைக்கப்படுகிறது. இந்த தளம் உலகின் மிகச்சிறந்த உணவுகளை தரவரிசை படுத்தி பட்டியல்களை அடிக்கடி வெளியிடுகிறது. இந்த இணையதளம் தற்போது உலகின் மிகச்சிறந்த பான் கேக் வகைகளை தரவரிசை படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் மசாலா தோசையும் இடம் பெற்றுள்ளது , மேலும் உலகின் மிகச் சிறந்த பான் கேக்குகளில் ஏராளமான இந்தியாவின் உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

அது எப்படி பான்கேக் வகைகளில் இந்தியாவின் தோசை வரிசைப்படுத்தப்பட்டது என்ற கேள்வி நமக்கு எழலாம்? பொதுவாக பான் கேக்குகள் பார்வைக்கு தோசையை போன்ற வடிவத்தில் இருக்கக்கூடியவை. அதே நேரம் அதன் மீது மிகவும் இனிப்பான மாப்பிள் சிரப் ஊற்றி சாப்பிடப்படுகிறது. வெளிநாடுகளில் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் இந்தியர்களுக்கு பான் கேக்கை பார்த்தவுடன் அடடா நம்மூர் தோசை இங்கே வந்து விட்டதா? என்ற மகிழ்ச்சி ஏற்படலாம். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காது.

டேஸ்ட் அட்லஸ் உலகின் மிகச்சிறந்த 100 பான் கேக்குகளை வரிசைப்படுத்தி உள்ளது. இதில் லாட்வியாவை சேர்ந்த கார்டுபேலு பங்குகாஸ் (Kartpelu Pankukas) என்ற உணவு வகை முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் மசாலா தோசை 6 இடத்தை பெற்றுள்ளது. மசாலா தோசை மட்டுமல்லாமல் ஏராளமான தோசை வகைகளும் இந்த உணவு பட்டியலில் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச பான்கேக் உணவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய உணவு வகைகளின் பட்டியல் தரநிலைகள் கீழே உள்ளது. இதில் மொத்தமாக 11 உணவு வகைகளுடன் இந்தியா அதிக இடங்களை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு 4 வகையான தோசைகளுடன் முன்னிலைப் பெற்றுள்ளது.

6. மசாலா தோசை , கர்நாடகா

15. தோசை, தமிழ்நாடு

35 . பேப்பர் தோசை, தமிழ்நாடு

60. அப்பம் , கேரளா

63 . பேசரெட்டு , ஆந்திரா

74. ஊத்தப்பம் , தமிழ்நாடு

84. நீர் தோசை, கர்நாடகா

85. மால்புவா , ஒடிசா

95. கல்லாப்பம் , கேரளா

96. ரவா தோசை , தமிழ்நாடு

98 . பிதா, ஒடிசா

தோசை என்பது இந்தியர்களுக்கு உணவு என்பதை விட அது ஒரு வகையான எமோஷன். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தோசைக்கு தினசரி உணவில் முக்கியத்துவம் உள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா தோசை , பேப்பர் தோசை , வெங்காய தோசை, ரவா தோசை , பெசரெட்டு , ஊத்தப்பம் உள்ளிட்ட தோசை வகைகளுக்கு பிரசித்தி பெற்றது.

கர்நாடகத்தை பொருத்தவரையில் மசாலா தோசைக்கு உலக புகழ்பெற்றதாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் அடையாளமாகவும் மைசூர் மசாலா தோசை இருக்கிறது , மேலும் அங்கு நீர் தோசையும் முக்கியத்துவம் வாய்ந்த மாநில உணவாக புகழ்பெற்றுள்ளது. கேரள மாநிலம் அப்பம் , கல்லாப்பம் போன்ற தோசை வகைகளுக்கு பெயர் பெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் மால்புவா மற்றும் பிதா என்ற இனிப்பு அப்பத்திற்கும் பெயர் பெற்றுள்ளது.

இந்திய பான் கேக்குகளின் அடிப்படையாக பெரும்பாலும் அரிசி மாவு இருக்கிறது. அரைத்து புளிக்க வைக்கப்பட்ட மாவில் இருந்து இந்த தோசை வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இதனுடன் சாம்பார் அல்லது காரசாரமான சட்னி வகைகளுடன் பரிமாறப்படுகிறது. மால்புவா மற்றும் பிதா ஆகிய இரண்டும் இனிப்பு வகைகளாக இருப்பதால் தனியாக பரிமாறப்படுகிறது

logo
Kalki Online
kalkionline.com