மாசி மகத் திருவிழா மோதல்: ஆம்புலன்சில் சென்ற பெண்ணை ஊரே சேர்ந்து அடித்த கொடூரம்!

மாசி மகத் திருவிழா மோதல்: ஆம்புலன்சில் சென்ற பெண்ணை ஊரே சேர்ந்து அடித்த கொடூரம்!
Published on

டலூர் மாவட்டம், சாத்தப்பாடி மாரியம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா நடைபெற்றது. திருவிழாவைத் தொடர்ந்து சாமி தீர்த்தவாரிக்குச் சென்று, பிறகு மீண்டும் ஊர்வலமாக ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தது. அப்போது சாத்தப்பாடியைச் சேர்ந்தவர்களுக்கும் மேலமணக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அதுவே பிறகு மோதலாக வெடித்துள்ளது. இந்த மோதலில் சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என ஆறு பேர் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்த இரு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களைத் தாக்கியவர்களை கைது செய்யச் சொல்லி சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து, அங்கே விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட இரண்டு கிராம மக்களையும் கலைந்து போகச் செய்தனர்.

இதனிடையே கைகலப்பில் ஈடுபட்டு காயடைந்த சிலர் ஆம்புலன்சில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஆம்புலன்சை வழி மறித்து எதிர் தரப்பைச் சேர்ந்த சிலர் தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் மற்றும் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது திடீரென முகத்தில் துணி கட்டி மறைத்திருந்த ஒருவர் அந்த ஆம்புலன்சில் ஏறி வந்து ஆம்புலன்சில் அமர்ந்திருந்த பெண் மற்றும் அனைவரையும் தாக்குகிறார். அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் ஆம்புலன்சுக்குள் ஏறி வந்து சரமாரியாக அவர்களைத் தாக்குகின்றனர். வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் கதறித் துடிக்கிறார்.

அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் முன்னிலையிலேயே இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் இந்த வீடியோ வெளியான பின்பு அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே ஆம்புலன்சில் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணைத் தாக்கியவர்களை போலீசார் உடனே கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலர் தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com