சேலத்தில் களை கட்டிய மாசி மயானக் கொள்ளை விழா – ஆடு, கோழிகளின் ரத்தம் குடித்தபடி பக்தர்கள்!!

சேலத்தில் களை கட்டிய மாசி மயானக் கொள்ளை விழா – 
ஆடு, கோழிகளின் ரத்தம் குடித்தபடி பக்தர்கள்!!

ண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று சேலத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன் கோயில்களிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும். அங்காளம்மன், பெரியாண்டிச்சி, முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களைப் போல் பக்தர்கள் வேடம் அணிந்து, பல வண்ணப் பொடியை முகத்தில் பூசி, மயில் தோகை அலங்காரங் களுடன்  நடனமாடி சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.

இதற்கு ஒரு செவி வழி கதையும் உண்டு. ஒரு சமயம் அகிலத்தைக் காக்கும் காளி அம்மன் கடும் கோப மடைந்து ஆக்ரோஷமாக இருந்ததாகவும்  
அங்காள பரமேஸ்வரியின்  கோபத்தைக் கட்டுப்படுத்த சிவபெருமான்  ருத்ரதாண்டவம் ஆடி, அம்மனை சங்கிலியால் கட்டிப்போட்டதாகவும், அம்மனின் கோபத்தை கட்டுப்படுத்தி சாந்தமடைய ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில் அம்மனின் கட்டுக்களை அவிழ்த்து உயிர் பலி வாங்க அனுமதி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

இதன் அடிப்படையிலேயே  மாசி அமாவாசை தினத்தில் மயானக் கொள்ளை விழாவை கோலாகலமாக நடத்தி வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம்  நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. பல நூறு ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது என்பது மிகச்சிறப்பு.

சேலம் டவுன் தேர் வீதி, ஜான்சன் பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம், நாராயண நகர், ஏரிக்கரை, சந்தைப்பேட்டை  மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோயில்கள் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து, மேளதாளங்கள் முழங்க பல்வேறு அம்மன்கள் வேடமணிந்து ஆடிய  பக்தர்கள்  புடைசூழ ஆங்காங்கே உள்ள சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

அப்போது  திரளான பக்தர்கள் வழியில் நின்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும்  வகையில் சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழி முட்டை போன்றவைகளைத் தந்து வணங்கி வேண்டிக்கொண்டனர். ஆட்டுக் குட்டிகளை வாங்கிய பக்தர்கள் அதை தங்கள் கழுத்துப் பகுதியில் தூக்கி போட்டு ஆடியதுடன் சில பக்தர்கள் கோழியையும்  வாயில் கவ்வியபடி ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர். சாமியாடியவாறு வந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதை குழியில் கிடந்த  மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆக்ரோஷத்தோடு ஊர்வலமாக சென்ற காட்சிகள் வேடிக்கை பார்த்த  பொதுமக்களை ஆச்சர்யப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது.

சிறுவர், சிறுமிகள் அம்மன் போன்ற சாமி வேடம் அணிந்து கையில் முறக்கூடை வைத்தவாறு ஊர்வலமாக வந்தனர். இவர்களிடம் உள்ள முறத்தால் அடி வாங்குவதன் மூலம் பேய் பிசாசு நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகமாகும் என்பதால் பக்தர்கள் இவர்களிடம் சென்று வணங்கி முறத்தால் அடி வாங்கியது சிறப்பு. மேலும், மயான கொள்ளை விழாவில்  அங்கு ஆடு பலியிடப்பட்டு பெண் பக்தர்களுக்கு ரத்தச் சோறும் வழங்கப்பட்டது.

சேலம் ஜான்சன் பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயின் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோசத்துடன் சாமி ஆடி வந்த பக்தர்கள் அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும் திருமணத் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் வேண்டியும் வரும் வழியில் தரையில் படுத்திருந்த பக்தர்களை சாமி வேடம் அணிந்து இருந்தவர்கள் தாண்டிச் சென்றனர்.

இதேபோல் கன்னங்குறிச்சி சீலநாயக்கன்பட்டி சந்தைப்பேட்டை உள்பட மாநகரில் பத்துக்கும் மேற்பட்ட சுடுகாடுகளில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தலைவாசல் அருகே ஆறகளூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி கோயிலிலும் அபிசேகம் பூஜைகளுடன் வெகு சிறப்பாக மயானக் கொள்ளை விழா  நிகழ்ந்தது. வருடத்துக்கு ஒரு முறை வரும் இந்த விசித்திர விழாவைக் காண ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று சேர்வார்கள் என்பதால்  மயான கொள்ளை நடந்த அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com