
வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது வாய்க்கவசம் அணிவிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சமீப காலமாகவே நாய் கடி, மாடு தாக்குதல் என பல பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக வளர்ப்பு நாய்கள், மாடுகளே இவ்வாறு செய்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். இதையடுத்து நாய் வளர்ப்போருக்கு விதிகளை கடுமையாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி நாய் வளர்ப்போர் தங்கள் நாய்களை சாலையில் அழைத்துச்செல்லும்போது வாயை மூடும் வகையிலான கவசம் அணிவிக்க வேண்டியது கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாய்கள் மற்றவர்கள் மீது வாய் வைக்காது, பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.
நாய்கள் வளர்ப்போர் அதற்கான உரிமம் பெற்றிருப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், வளர்ப்பு நாய் ஒருவரை கடித்தால் அதற்கு உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை கடந்தாண்டே மாநகராட்சி அறிவித்திருந்தது. ஆனால் நாய் வளர்க்கும் பெரும்பாலானோர் இந்த விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நாய்கள் தொடர்பாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ள நிலையில் விதிகளை கடுமையாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வளர்ப்பு நாய்களை பொது வெளியில் அழைத்து வரும்போது வாய்க்கவசம் அணிவித்து அழைத்து வரவேண்டும், அப்படி செய்யாதபட்சத்தில் நாயின் உரிமையாளருக்கு ரூ.1000த்துக்கு மேல் அபராதம் வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரேனும் இதை கவனித்தால், சென்னை மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.