இந்தியாவில் மகப்பேறு விடுப்பு என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே விதமாக பின்பற்றப்படுவதில்லை. அதே போன்று தனியார் நிறுவனங்களில் மகப்பேறு விடுப்பு என்பது பெரிய நிறுவனங்களில் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கி வருகிறது. ஆறு மாதங்களுக்கு பின்னர் வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் வசதியை சில நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. ஓராண்டு வரை இவை நடைமுறையில் இருக்கின்றன.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் ஆறு மாதங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு தரப்படுகிறது. இவற்றை இன்னும் 3 மாதங்கள் உயர்த்தவேண்டும் என்பது மகிளா சங்கங்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே பால், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு தரப்படும் மகப்பேறு விடுப்பை ஆறு மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்களாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
மகப்பேறு விடுப்பு, முன்னர் 12 வாரங்கள் மட்டுமே இருந்தது. 2016 காலகட்டத்தில் பெண்களுக்கான மகப்பேறு குறித்த விஷயங்களில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 2017ல் கொண்டு வரப்பட்ட மகப்பேறு திருத்தச்சட்டம் ஏற்கனவே 12 வாரமாக இருந்த மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக உயர்த்தியது.
இவற்றை அமலுக்கு கொண்டு வருவதற்கே ஆறு வருடங்களாகியிருக்கின்றன. இன்னும் பல தனியார் நிறுவனங்கள் மகப்பேறு விடுப்பை சம்பளமில்லாத விடுப்பாகவே வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஆறு மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை உயர்த்துவது குறித்து பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் ஒன்றாக உட்கார்ந்து கலந்தாலோசித்து இது குறித்து முடிவு செய்யவேண்டும் என்று அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
குழந்தைகள் காப்பகம் அமைப்பதை தனியார் நிறுவனங்கள் உறுதி செய்து, நிதி ஆயோக் அமைப்புக்கு உதவி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதே போன்று முதியோர் காப்பகங்கள் அமைப்பதற்கும் தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர்களை பாதுகாக்கும் பணிகளுக்கென இளைய தலைமுறையை தயார் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான சாப்ட், ஹார்ட் ஸ்கில் பயிற்சிகளை நடத்துவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்கிறார். ஹெல்த்கேர் பற்றிய விஷயங்களில் தொடர்நது விழிப்புணர்வு அதிகமாகி வரும் நிலையில் கேர் செண்டர்கள் பல உருவாக வாய்ப்பு இருப்பது நிஜம்தான்.