ஊட்டியில் 34 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு!

ஊட்டியில் 34 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு!

நேற்றைய தினம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்து மாணவர்களும், மாணவிகளும் பாராட்டுகளை குவித்து வரும் வேளையில் ஊட்டியில் 34 மாணவமணிகள் செய்த தவறை எண்ணி தவித்து வருகிறார்கள். தேர்வு எழுதியும் பயனற்றுப் போனது அவர்களின் கல்வி. அவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வேண்டிய ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?

ஊட்டியில் பிளஸ் டூ கணிதத் தேர்வில் ஆசிரியர்கள் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட  34 மாணவ மாணவிகளின் கணிதத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கி 3ஆம் தேதி வரையும் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு மார்ச் மாதம் 14ஆம் தேதி துவங்கி 4ஆம் தேதி வரையும் நடைபெற்றது. இதில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில்  41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றில்  3525 மாணவர்கள் 3915 மாணவிகள் என 7440 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

   இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்த கணித தேர்வில் மாணவ மாணவிகள் ஒரு சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நீலகிரி மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் பதிவாகியிருந்த காட்சிகளில் விடை எழுத மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அறைக் கண்காணிப் பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 34 மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் மட்டும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்த முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி கூறுகையில் “தேர்வு முறைகேடு சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு ஏற்கனவே ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இதற்கிடையே கணித தேர்வு நடந்த அன்றைய தினம் எழுதிய மாணவர்களின் வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் தான் முடிவு செய்யும்“ என்றார்.

இதில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளின் இந்த செயலால் அவர்களின் பெற்றோர் தலைகுனியும் படியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியர்களே அவர்களுக்கு உதவி செய்தது கண்டிக்கத்தக்கது. மதிப்பெண்களே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து நேர்மையான வழியில் தேர்வை சந்திக்கும் துணிவு பிள்ளைகளிடையே வரவேண்டும். அதற்கு ஆசிரியர்களும் பெற்றோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com