

இந்த மாதம் 22 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் உள்ளூரில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க இந்துமதத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மோரீஷஸ் அரசு இரண்டு மணி நேர சிறப்பு விடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்து மதத்தில் நம்பிக்கையுள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை (இரண்டு மணி நேரம்) சிறப்பு விடுப்பு வழங்க மோரீஷஸ் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் ராமர் ஆலய கும்பாபிஷேகம் ஒரு முக்கிய நிகழ்வாகும். இது அயோத்திக்கு ராமர் திரும்புவதைக் குறிக்கிறது என்றும் மோரீஷஸ் அரசு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அங்கு வருகிற 22 ஆம் தேதி ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டையும், கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வில், முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அமெரிக்காவில், நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ராமர் ஆலய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் இதேபோன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ராமர் ஆலய கும்பாபிஷேகத்தையொட்டி அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அமெரிக்காவுக்கான தாய்லாந்து நாட்டு தூதர் டானி சங்ராட், ராமர் ஆலய திறப்பு விழா வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து மக்கள் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள பொதுவான கலாசாரத்தை கொண்டாடும் மக்களுக்கு அயோத்திக்கு ராமர் திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.