மயானக் கழிப்பறை மக்களுக்கா? பிணங்களுக்கா?

மயானக் கழிப்பறை மக்களுக்கா? பிணங்களுக்கா?

வேலூர் மாவட்டம், கனியம்பாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமம் கம்மசமுத்திரம். இந்த கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் கழிப்பறை கட்ட வசதி உள்ள ஐம்பது சதவிகித குடும்பங்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஐம்பது சதவிகித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அக்கம் பக்கத்து வீட்டினரின் கழிப்பறைகளையோ அல்லது பொதுவெளியையோதான் பயன்படுத்தும் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கழிப்பறை வசதி இல்லாத மற்ற குடும்பத்தினருக்கும் பொதுக்கழிப்பறை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக அந்த கிராம மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டுக்கு மத்தியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு பொதுக்கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒருவர் அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதுமட்டுமில்லை, இடுகாட்டுக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும் அந்த கழிப்பறையைப் பூட்டி அதன் சாவி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைக்குச் செல்ல நினைப்போர் அந்த நபரைத் தேடிப் பிடித்து அவரிடம் சாவியை வாங்கிக் கொண்டுதான் அந்தக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும்.

‘பகல் நேரத்தில் ஆண்களே இடுகாடு பக்கம் செல்ல யோசிக்கும் நிலையில், இரவு நேரத்தில் அவசரத்துக்குப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கழிப்பறை செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது’ என்று அந்த கிராமத்துப் பெண்கள் பலரும் பெரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ‘இந்தப் பொதுக்கழிப்பறைகள் எங்களைப் போன்ற ஏழை மக்கள் பயன்பாட்டுக்கா? அல்லது மயானத்தில் புதைக்கப்பட்டு இருக்கும் பிணங்களுக்கா?’ என்றும் கேட்கிறார்கள். ‘இது குறித்து, ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் உறுதி கூறி இருப்பதாக அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள்.

‘நம் நாட்டில் எது எதற்குத்தான் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com