ஓராண்டை நிறைவு செய்யும், மேயர் ப்ரியா! சென்னையின் முதல் பெண் மேயர் என்ன சாதித்திருக்கிறார்?

ஓராண்டை நிறைவு செய்யும், மேயர் ப்ரியா! சென்னையின் முதல் பெண் மேயர் என்ன சாதித்திருக்கிறார்?

ஓராண்டுக்கு முன்பு வரை சென்னைவாசிகளுக்கு மேயர் திருமதி. ப்ரியாவை தெரிந்திருக்க நியாயமில்லை. சென்ற ஆண்டில் தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டபோது, வரலாற்று பாரம்பரியம் மிக்க மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.

1958 முதல் சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க தொடர்ந்து முத்திரை பதித்து வந்திருக்கிறது. 1996 ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தபோது சென்னை மாநகராட்சி மேயராக சென்னை வாசிகளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்முறையாக சென்னை மேயர் பதவி மீது பெரும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது.

பின்னாளில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் சென்னை மேயராக பதவி வகித்தவர்கள் பெரிய அளவில் முத்திரை பதிக்க முடிந்ததில்லை. பின்னர் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்ரமணியன் சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்னையில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு, பெண் மேயராக ப்ரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிரபலமான முகமாக இருந்ததில்லை. தி.மு.கவில் எந்தவொரு முக்கியமான நிர்வாகியாகவும் இருந்ததில்லை. இளம் வயது. நிர்வாக அனுபவமில்லாதவர். இவரால் எப்படி மேயர் பதவியில் இருந்து திறம்பட நிர்வாகத்தை கவனிக்க முடியும் என்கிற கேள்வி எழுந்தது.

சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் இருந்த காலத்தில்தான் மேயராக ப்ரியா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சவாலான விஷயங்கள் காத்திருந்தன. பதவியேற்றதும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை அறிவித்தார். சென்னையை அழகுப்படுத்தும் திட்டங்களுக்கு இதுவரை கூடுதல் முக்கியத்துவம் தந்திருக்கிறார்.

எந்தவொரு மேயரும் செய்யாத சாதனையாக இதுவரை 700 தீர்மானங்களை சென்னை மாநகராட்சி மன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். அனைத்தும் சென்னை மாநகரத்தின் கட்டமைப்பு பணிகள், மக்கள் நலப் பணிகள் சம்பந்தப்பட்டவையாக இருந்திருக்கின்றன.

மாநகரம் முழுவதும் உள்ள இலவச கழிப்பறை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பிற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் புதிய பூங்காக்கள், சுகாதார மையங்களுக்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டிருககின்றன.

அனுபவமில்லாமல் களத்திற்கு வந்தாலும் குறுகிய காலகட்டத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு சென்னைவாசிகளின் மனதில் ப்ரியா இடம்பெற்றிருக்கிறார். சென்னையைத் தாண்டியும் ப்ரியாவுக்கு கணிசமான கவனம் கிடைத்த காரணத்தால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

மேயராக ஓராண்டு நிறைவு செய்த ப்ரியாவை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டி, கௌரவப்படுத்தியிருக்கிறார். சிறப்பான செயல்பாடுகளுக்கு சொந்தக்கார மேயர் ப்ரியாவை நாமும் வாழ்த்துவோம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com