

சென்னையில் மதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் தாயகத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சியை பிடித்தது. தங்களது ஆட்சி பெரும்பான்மை பெற ஆதரவு கொடுத்த அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும், அமைச்சர் பதவியை கொடுத்து தவெக அழகு பார்த்தது. இதனால் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றன.
திமுக கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் தவெகவிற்கு சென்றுள்ள நிலையில் மதிமுக மட்டுமே திமுக கூட்டணியில் தொடர்ந்தது. இந்நிலையில் இன்று மதிமுக பொதுக்குழு கூடி மொத்தமாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதல் தீர்மானமாக திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் பேசிய வைகோ " 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மதிமுக உயர்நிலைக் குழு கூடி திமுக கூட்டணியில் இணைவது பற்றி முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக பயணித்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுகவின் தனித்துவ அடையாளத்தையும் , அது 32 ஆண்டு காலம் தமிழ்நாட்டு மக்களுக்காக போராடிய போராட்டங்களையும், மறக்க செய்யும் வகையிலும் திமுக கூட்டணி நடந்து கொண்ட விதத்தினை தாங்கிக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம். எடுத்த முடிவில் உறுதியாக இருந்து மதவாத கூட்டணியை எதிர்த்து தேர்தலை சந்தித்தோம்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் , மக்கள் தீர்ப்புக்கு எதிராக மதவாத சக்திகளுடன் ஒன்று சேர்ந்து, 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காக நடத்தப்பட்ட பேரங்களை எல்லாம் நாடறியும். இதனால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கொள்கை கூட்டணி எல்லாம் பொருளற்றதாக மாறின.
இந்த சூழலில் மதிமுக இனியும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர வேண்டாம், என்று கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப முடிவு செய்ய இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் இணைந்திருந்த மதிமுக தங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு திமுக அனுமதிக்கவில்லை. அவர்கள் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். திமுக கூட்டணியில் 4 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது பொதுக்குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி தவெக கூட்டணியில் மதிமுக இணைவதற்கு முன்னர் , தங்கள் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளனர்.
இன்றைய நிகழ்ச்சியில் பெரிய திருப்பமாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான, சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் எம்எல்ஏ டி எம் ராஜேந்திரன் ஆகியோர்,பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை , அத்துடன் தங்களது பதவியை ராஜினாமா செய்யவும் மறுத்துவிட்டனர்.
மேலும் இவர்கள் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இவர்கள் இருவரும் திமுக உறுப்பினராக இணைந்திருப்பார்கள். அதனால், அவர்கள் திமுகவில் இணைவதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை. அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைவதால் எந்த தாக்கமும் இருக்காது, என்பதால் குழப்பம் நீடிக்கிறது.