‘தமிழக வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று வனத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இன்று, ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, கோவையில் இரண்டு நாட்கள் யானைகள் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ‘தமிழ்நாட்டில் யானைகளைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் பயனுள்ள பல நடவடிக்கையால் தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரம் கூறுகிறது.
மேலும், யானைகளின் வழித்தடங்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு அவற்றைப் பராமரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு யானைகளின் வழித்தடங்களில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்து, யானைகளுக்கு பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக மின் வேலி அமைத்திருப்பவர் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், யானைகளின் வழித்தடங்களில் வணிக ரீதியாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றும் பணியும் தற்போது நடைமுறையில் உள்ளது.
மனித - விலங்குகளுக்கிடையான மோதல் தற்போது அதிகரித்து வருகிறது. உயிரினங்கள் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்த காடுகளில் தீவிர கண்காணிப்பு வனத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வன விலங்குகளை வேட்டையாடும் நிலை தமிழ்நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
காடுகளில் யானைகளுக்கான உணவுத் தேவைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடிய யானை நல ஆர்வலர்களைத் தேர்வு செய்து தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு புகழ்பெற்ற கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி விருது வழங்கப்பட உள்ளது.
தற்போது யானைகளின் வழித்தடங்கள் சில கண்டறியப்பட்டுள்ளன. மற்றும் சில வழித்தடங்கள் சந்தேகத்தில் உள்ளன. அவற்றிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை வனப்பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் பேசி உள்ளார்.