தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் இன்று 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங் கன்றுகள் வழங்கப்படும் என்றும், இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் கூறினார். மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படுவதோடு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் 14,500 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 750 தொகுப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினருக்கு கேழ்வரகு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நியாய விலை கடைகள் மூலம் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானியங்களை மதிப்பு கூட்டு விற்பனை செய்ய ஏதுவாக பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும்.
மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள் இயக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்படும். வரும் ஆண்டின் மத்திய மாநில அரசுகள் உதவியுடன் 22 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்று குறிப்பிட்டார்.
சிறுதானியங்கள் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க 82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.