“ஊடகங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்”

“ஊடகங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்”
Published on

தொலைக்காட்சி நெறியாளர்கள் வாய்க்கு வந்தபடி பேசாமல், பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வெறுப்புப் பேச்சு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதை தெரிவித்துள்ளது. நாட்டில் வெறுப்புப் பேச்சுக்கள், பிரச்சாரங்களை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பிவி நாகரத்னா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தொலைக்காட்சி சேனல்கள் டி.ஆர்.பி.க்காக மோதிக் கொள்கின்றன. தொலைக்காட்சி தரவரிசைக்காக அவர்கள் நடத்தும் போட்டா போட்டி சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது. அச்சு ஊடகங்களுக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா இருப்பது போல் செய்தி சேனல்களைக் கண்காணிக்க ஏதுமில்லை. பேச்சு சுதந்திரம் தேவைதான் ஆனால் அது எந்த விலையைக் கொடுத்து என்பதுதான் முக்கியம்.

இந்த நீதிமன்றம் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஏர் இந்தியா விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட நபர் பற்றிய விவாதத்தில் அவருடைய பெயரைக் கூறி கண்டபடி ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்தன. அவர் இன்னும் விசாரணைக் கைதி தான் என்பதை ஊடகம் நினைவில் கொள்ளவில்லை. எல்லோருக்கும் சுயமரியாதை இருக்கிறது.

வெறுப்புப் பிரச்சாரங்கள் சமூகத்தில் பெரும் பிரச்சினையாகி வருகின்றன. அது நிறுத்தப்பட வேண்டியது அவசியம். ஒருவேளை அத்தகைய வெறுப்புப் பேச்சை ஊக்குவிப்பராக ஒரு தொலைக்காட்சி நெறியாளர் செயல்பட்டால் அவரை ஏன் அந்த நிகழ்ச்சியில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் சுதந்திரமான சமநிலை வாய்ந்த ஊடகம் வேண்டும். ஒரு நேரலை நிகழ்ச்சியில் அதன் மாண்பைப் பேணுவது நெறியாளர் கையில்தான் இருக்கிறது. அந்த நெறியாளர் நியாயமாக இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் ஊடகங்கள் இருக்கின்றன. அதனால் வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சூழலில் அவர்கள் இருப்பார்களேயானால் நடவடிக்கை அவசியமாகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com