டி.கே சிவக்குமார் சொல்லிவிட்டார் என்பதற்காக மேகதாது அணையை கட்டிவிடமுடியாது; பா.ஜ.க நாடகமாடுகிறது - அழகிரி அதிரடி!

டி.கே சிவக்குமார் சொல்லிவிட்டார் என்பதற்காக மேகதாது அணையை கட்டிவிடமுடியாது; பா.ஜ.க நாடகமாடுகிறது - அழகிரி அதிரடி!

கர்நாடாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஒரு வார்த்தை சொல்லிவிட்டதற்காக அதை வைத்துக்கொண்டு பா.ஜ.கவினர் நாடகமாடுகிறார்கள். அப்படியெல்லாம் விதிகளை மீறி மேகதாது அணை கட்டிவிடமுடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கையின் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணைமுதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துகள் தமிழ்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியிருக்கின்றன. இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மேகதாது அணை கட்டுவதில் முனைப்பு காட்டும் கர்நாடகாவை எதிர்த்து தமிழக முதல்வர் பேசாமலிருக்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தார்.

அண்ணாமலையின் விமர்சனத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, அறிக்கையின் மூலம் பதிலடி தந்திருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுவதாக டி.கே.சிவகுமார் சொன்ன ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு அண்ணாமலை தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகிறார். காவிரி நீரை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வரையறை செய்துள்ளது. அதை யாரும் மீறிவிடமுடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சென்று மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தில் பா.ஜ.க அரசு ஒப்புதல் தந்திருக்கிறது.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சொன்னதற்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மறுப்பு தெரிவித்திருப்பதோடு எக்காரணத்தை கொண்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார். ஆனால், சிவக்குமார் பேச்சுக்கு முக்கியத்துவம் தரும் அண்ணாமலை ஏனோ துரைமுருகனின் கருத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை.

தமிழக முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால், அண்ணாமலையோ மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஸ்டாலின் என்னும் மக்கள் பிரதிநிதியை உள்ளே விட மாட்டேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. சர்வாதிகாரத்தினுடைய உச்சவெறி அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. நம்முடைய முதல்வர், காவிரிப் படுகையின் மண்ணின் மைந்தர் மட்டுமல்ல, தமிழகத்தின் மண்ணின் மைந்தர். அவரை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல இவர் யார்?

காவிரி நீரை பயன்படுத்துகிற மாநிலங்களின் அனுமதியை பெற்றுத் தான் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் ஒப்புதல் தந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ.கவும் கர்நாடக பா.ஜ.கவும் இணைந்து மற்ற மாநிலங்களின் அனுமதியை பெறாமல் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். இதுவொரு மிகப்பெரிய துரோகம்.

காவிரி நீரை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அதனை யாரும் மீறி விட முடியாது. கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக அணையை கட்டிவிட முடியாது. தமிழ்நாடு அரசும், தமிழக காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மேகதாது அணை பற்றிய விஷயத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட மாநிலக்கட்சிகளை முந்திக்கொண்டு பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் அவசரமாக களத்தில் இறங்கியிருப்பதற்கான காரணம் என்ன? வேறென்ன, நாடாளுமன்ற தேர்தல்தான் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com